ரஜினி அரசியலுக்கு வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும்: பாஜக பிரமுகர்
- IndiaGlitz, [Friday,September 06 2019]
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்திரராஜன், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுனராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவர் வகித்த பதவிக்கு பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்பட பலர் போட்டியில் உள்ளனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாஜகவின் தமிழக தலைமை பொறுப்பை ஏற்க வாய்ப்பு உள்ளதாக ஒருசில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் தெரிவித்து வருகின்றனர். தனிக்கட்சி ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார், விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று ரஜினி தெளிவாக கூறியபின்னரும் இப்படி ஒரு வதந்தியை ஒருசிலர் பரப்பி வருகின்றனர். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத ரஜினி, எப்படி பாஜகவின் தலைவராக முடியும? என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் பாஜக பிரமுகரும், தமிழக பாஜக தலைவர் போட்டிக்கான பட்டியலில் இருப்பவருமான எஸ்.வி.சேகர் இதுகுறித்து கூறியபோது, ‘பாஜகவில் ரஜினி இணைவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்றும், ஆனால் பாஜக மற்றும் ரஜினியின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை என்றும் தெரிவித்தார். மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்பது உறுதி' என்றும் எஸ்.வி.சேகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.