Download App

Idiot Review

இடியட்: படம் பார்த்தவர்களுக்கு கிடைத்த பட்டம் தான் டைட்டில்

மிர்ச்சி சிவா என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, அதேபோல் ’தில்லுக்கு துட்டு’ ’தில்லுக்குதுட்டு 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த இயக்குனர் ராம்பாலா இந்த படத்தையும் நகைச்சுவை படமாக எடுப்பார் என்ற நம்பிக்கையில் படத்தை பார்த்தால் அந்த நம்பிக்கையை காப்பாற்றினாரா இயக்குனர்? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்

பேய் கதை என்றால் ஒரு பிளாஷ்பேக் கதை இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. அதன்படி ஜமீன்தார் பரம்பரையை அவருடைய பாதுகாவலர்கள் கொன்றுவிட்டு பணம் நகைகளை கொள்ளை அடிக்கின்றனர். போகும்போது அந்த குடும்பத்தின் வாரிசான குழந்தையையும் எடுத்துச் செல்கின்றனர். அந்த குழந்தை யார்? அந்த குழந்தையை எங்கே வளர்ந்தது? மீண்டும் ஜமீன் சொத்துக்களை கைப்பற்றியதா? என்பதை காமெடியுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம் பாலா

வழக்கம்போல் வேலை வெட்டி இல்லாத இளைஞர் கேரக்டர் சிவாவுக்கு. படிப்பறிவே இல்லாமல் பந்தா செய்யும் அப்பா ஆனந்தராஜிடம் திட்டு வாங்குவது, அம்மாவிடம் செல்லமாக கோபித்து கொள்வது என்ற கேரக்டர். இந்த நிலையில் திடீரென அப்பாவிடம் இருந்து கோபித்துக் கொண்டு செல்லும் சிவாவுக்கு ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை, நிக்கி கல்ராணி உடன் காதல் என்று செல்லும் கதை ஒரு வழியாக மீண்டும் ஜமீன் கதைக்கு திரும்பி வந்து கொள்ளையர்கள் தூக்கிச்சென்ற குழந்தை யார் என்பதை சொல்வதுடன் கதை முடிகிறது.

சிவாவுக்கு நடிப்பதற்கு வேலையே இல்லை. அவருடைய கேரக்டர் அந்த அளவுக்கு தான் உருவாக்கப்பட்டுள்ளது. நிக்கி கல்ராணி பாதி நேரம் மயக்கத்தில் இருக்கிறார் என்பதால் இவருக்கும் சிவா நிலைமை தான். அக்சரா கவுடாவை வில்லியாக்க காட்ட முயற்சித்துள்ளார் இயக்குனர், ஆனாலும் எடுபடவில்லை.

’தில்லுக்கு துட்டு’ ’தில்லுக்குதுட்டு 2’ ஆகிய படங்களில் நடித்த சந்தானம் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தால் ’தில்லுக்குதுட்டு 3’ என்ற டைட்டில் வைத்து இருப்பார்கள். அந்த அளவுக்கு கிட்டத்தட்ட அதேபோன்ற கதைதான். முதல் பாதியில் சிவா, ரெடின்கிங்ஸ்லி, ஆனந்தராஜ் ,ஊர்வசி, போன்ற நகைச்சுவைக்கு பெயர்போன நடிகர்கள் இருந்தும் மருந்துக்கு கூட பார்வையாளர்களிடமிருந்து சிரிப்பு வரவில்லை

முதல் பாதியை ஒப்பிடும்போது இரண்டாவது பாதி ஓரளவுக்கு பரவாயில்லை. அதிலும் குறிப்பாக கடைசி கால் மணி நேரம் கிளைமாக்ஸ் காட்சிகள் ஓரளவு சிரிக்கும் வகையில் இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஆனந்தராஜ் மற்றும் ஊர்வசி தான்

இந்த படத்தின் கதை என்ன என்பதை ஒரு கட்டத்தில் இயக்குனர் மறந்துவிட்டு ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் படத்தை நகர்த்தியுள்ளார். லொள்ளுசபா, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்த அரதப்பழசான காமெடிகள் படத்தின் பெரும்பான்மையாக உள்ளது. கன்னத்தில் மரு வைத்து மாறுவேடம் போடுவதை சிவாவே நடித்துவிட்டார். மீண்டும் இந்த படத்தில் அதே காமெடியா? தாங்க முடியலை சாமி.

படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவை கொஞ்சம்கூட எடுபடவில்லை என்பதற்கு முழு பொறுப்பையும் இயக்குனர் ராம்பாலாதான் ஏற்கவேண்டும்.  படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே உள்ளது என்பதும், படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் மட்டுமே என்பதும் ஒரு மிகப்பெரிய ஆறுதல்

மொத்தத்தில்   ’தில்லுக்கு துட்டு’ ’தில்லுக்குதுட்டு 2’ படம் போன்று நகைச்சுவைக்கு கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் பார்க்கும்படியான படமாக ’இடியட்’ அமைந்திருக்கும்.

ஓடிடியில் வந்த பிறகு ஓட்டி ஓட்டி பார்த்து கொள்ளலாம்

Rating : 2.0 / 5.0