ரஜினி, கமல் வரிசையில் இணைந்த விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Wednesday,February 24 2016]

'தோழா' படத்தை அடுத்து முதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் 'காஷ்மோரா'. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார்.


இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ரஜினியின் எந்திரன், கமலின் விஸ்வரூபம் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகி வரும் நிலையில் அந்த வரிசையில் விஜய்சேதுபதியின் படம் ஒன்றின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.