'ஐஸ் அவுஸ் டு ஒயிட் அவுஸ்' நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? ஆர்.ஜே.பாலாஜி
- IndiaGlitz, [Tuesday,December 19 2017]
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய ஆர்.ஜே.பாலாஜி வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அமெரிக்காவில் காமெடி ஷோ ஒன்றை நடத்துகிறார். அமெரிக்காவின் ஆறு முக்கிய நகரங்களில் நடைபெறும் இந்த காமெடி நிகழ்ச்சியின் பெயர் தான் 'ஐஸ் அவுஸ் டு ஒயிட் அவுஸ்'. இந்த நிகழ்ச்சி சென்னையிலும் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது: கடந்த ஆண்டு முதலே தமிழகத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தது முதல் இன்றைய அரசின் காமெடி காட்சிகள் உள்பட, சமீபத்தில் ஏற்பட்ட புயலின் பாதிப்பு உள்பட இந்த ஆண்டு தமிழக மக்களே துன்பப்படும் ஆண்டாக இருந்தது. இதற்கிடையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, மாட்டுக்கறி தடை, மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளும் அடங்கும்.
இந்த பிரச்சனைகள் குறித்து தமிழக மக்களும் ஊடகங்களும் நிறைய பேசிவிட்டார்கள். ஆனால் இது போதாது என்று நினைக்கும் நான், இந்த நிகழ்ச்சியின் மூலம் கலாய்க்க முடிவு செய்துள்ளேன். இது என்னுடைய நிகழ்ச்சி மட்டும் கிடையாது, மக்களும் நானும் இணைந்து செய்யும் முயற்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஓட்டு போட்டு ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருதும் அளிக்கவுள்ளனர். முழுக்க முழுக்க காமெடிக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது' என்று கூறியுள்ளார்.