குழந்தைகள் உண்ணும் ஐஸ்கிரீமிலும் கொரோனா வைரஸா? பதைக்க வைக்கும் தகவல்!

கொரோனா வைரஸ் பொருட்களின் மேற்பரப்புகளில் தங்கி இருக்கும் என்ற தகவலை கடந்த ஜனவரி மாதத்திலேயே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர். அதையடுத்து உணவிலும் கொரோனா வைரஸ் இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் வேக வைத்த உணவுப் பொருட்களில் இருக்க வாய்ப்பில்லை. எனவே பயமில்லாமல் கடைகளில் விற்கும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இதற்குமாறாக சீனாவில் இறக்குமதி செய்யப்பட்ட கோழி மற்றும் மீன்களில் கொரோனா வைரஸ் இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சீனாவின் தியான்ஜின் எனும் நகரில் தற்போது ஐஸ்கிரிமிலும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தியான்ஜின் நகரில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தத் தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 1,812 டன் ஐஸ்கீரிம்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை விநியோகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளன. இதனால் இந்தப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, ஏற்கனவே யார் வாங்கியது, யார் சாப்பிட்டது என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒருவேளை மனிதர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் ஐஸ்கிரீமிற்கு சென்று இருக்குமா என்ற சந்தேகமும் எழுப்பட்டு உள்ளது. இதனால் அத்தொழிற்சாலையில் பணியாற்றிய 662 பணியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும் அத்தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக மனிதர்களை பாதித்த கொரோனா வைரஸ் சிங்கம், புலி, கீரி, நாய், பூனை அடுத்து கொரில்லா என விலங்குகளையும் தாக்கத் தொடங்கியது. அடுத்து கோழி, மீன் தற்போது ஐஸ்கீரிம் எனப் பொருட்களிலும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.