ஐசிசி தரவரிசையில் ஹிட்மேனின் புது சாதனை… தொடர்ந்து அசால்ட் காட்டும் அஸ்வின்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்று இருக்கிறது. அடுத்த போட்டி வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஐசிசி, கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியக் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் முன்னிலை பெற்று இருப்பது பெருமையாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமான ரோகித் சர்மா வெறும் ஒன்றரை வருடங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அபாரமான விளையாட்டை காட்டி இருக்கிறார். மேலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அதிரடியாக விளையாடிய இவர் ரன் ரேட்டிங்கை உயர்த்தவும் காரணமாக இருந்தார். அந்த வகையில் தற்போது பேட்டிங் தரவரிசையில் 8 ஆவது இடத்தை பிடித்து இருக்கிறார். வெறும் 2 வருடங்களில் ரோகித் சர்மாவின் இந்த முன்னேற்றம் பெரும் வியப்பாகப் பார்க்கப்படுகிறது.

அதோடு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்பின் பந்து வீச்சாளராக இருந்து கொண்டு ஐசிசி பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் 3 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினின் பந்து வீச்சு மலைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது. இதனால் ஐசிசி தரவரிசையில் தற்போது அஸ்வின் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். மேலும் ஐசிசியின் 10 தரவரிசை பட்டியலுக்குள் இருக்கிற ஒரே ஸ்பின் பவுலர் என்ற பெருமையையும் தக்க வைத்துக் கொண்டு உள்ளார்.