அணியின் முடிவை அஸ்வின் புரிந்து கொள்வார். விராத் கோஹ்லி

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்டான் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் உலகின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்து கொள்ளாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட பாண்ட்யா கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் அஸ்வின் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் இடம் பெறாதது குறித்து கேப்டன் விராத்கோஹ்லி கூறியதாவது:

அஸ்வின் உலகின் முன்னணி சுழற்பந்து வீரர். ஒவ்வொருவருக்கும் அவரை பற்றி நன்றாக தெரியும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நீக்கப்பட்ட அவர் அணி நிர்வாகத்தின் முடிவை புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன். அஸ்வினுக்கும் எனக்கும் பீல்டிங் வியூகம் வகுப்பது உள்ளிட்ட விவகாரங்களில்தான் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மற்ற எந்த விஷயத்திலும் அவருடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அணி தேர்வு குறித்து நீங்கள் விரும்பிய முடிவை எடுக்க உங்களுக்கு ஆதரவு அளிப்பேன் என்று அஸ்வின் என்னிடம் தெரிவித்து இருந்தார்' என்று கூறினார்.

மேலும் 'ஹர்த்திக் பாண்ட்யா உண்மையிலேயே இந்திய அணியின் சொத்தாக இருப்பதாகவும், பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் அவர் முத்திரை பதித்து வருவதாகவும் கூறிய விராத் கோஹ்லி, நாங்கள் எந்த அணியையும் சாதாரணமாக நினைக்காமல், எல்லா அணிகளும் எதிராகவும் ஒரே மாதிரியாக ஆடுவோம் என்று கூறினார்.