அரசு பள்ளியில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள்: குவியும் பாராட்டுக்கள்

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. தொண்டுள்ளம் கொண்ட ஆசிரியர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றி வருவது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நடுத்தர வர்க்கத்து பெற்றோர்கள் கூட கடன் வாங்கியாவது தங்கள் குழந்தைகளை அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதை ஒரு பெருமையாகவும் அவர்கள் நினைக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி லலிதா, தனது ஒரே மகள் தருணிகாவை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் தற்போது தரமாகவே செயல்பட்டு வருவதாகவும், இதனால் தன்னுடைய ஒரே செல்ல மகளை அரசு பள்ளியில் சேர்க்கும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் லலிதா கூறியுள்ளார். லலிதாவின் இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே அரசு ஊழியர்கள் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் சமீபத்தில் வலியுறுத்திய நிலையில் வெறும் அறிவுரை மட்டும் கூறாமல் தன்னுடைய மகளை அரசு பள்ளியில் சேர்த்து ஒரு வழிகாட்டியாக லலிதா திகழ்ந்துள்ளார். இவரை பின்பற்றி மற்ற அரசு உயரதிகாரிகளும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.