ஜெயலலிதாவுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். பிரபல நடிகை

  • IndiaGlitz, [Thursday,May 18 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அதிமுக தலைவர்கள் யாராவது சென்று அஞ்சலி செலுத்தினால் அதிரடி திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதுவரை ஓபிஎஸ், சசிகலா, தினகரன், தீபா உள்பட பலர் ஜெயலலிதா சமாதிக்கு சென்றதால் அவர்களது சொந்த வாழ்விலும், அரசியல் வாழ்விலும் ஒருசில நன்மை மற்றும் தீமை சம்பவங்கள் நடந்துள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசியும், அதிமுக பேச்சாளருமான நடிகை விந்தியா, நேற்று இரவு திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நான் எப்போதும் போயஸ் கார்டன் சென்று என் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை ஜெயலலிதாவுக்குக் கொடுப்பேன். அவர் இப்போது கடற்கரையில் உள்ளதால் இங்கு வந்து கொடுக்கிறேன். பொதுமக்களுக்கு மாம்பழங்களைக் கொடுத்தால் அது மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு கொடுப்பதற்கு சமம்.

அதிமுக என்கிற இயக்கம் புரட்சித்தலைவி அதிமுக அம்மா அணி, அதிமுக அம்மா அணி என இரண்டாகப் பிரிந்துள்ளது. ஆட்சியில் இருக்கும் அணியில் சேர வேண்டுமா? அல்லது உரிமை இருக்கும் அணியில் சென்று சேர வேண்டுமா என்று நான் அலைபாய விரும்பவில்லை. ஆதாயம் தேடுகிறவர்கள் தான் அணியைத் தேடுவார்கள். எனக்கு ஜெயலலிதா கொடுத்த அடையாளம் போதும். ஜெயலலிதா இறந்த துக்கத்தால் நான் மனதளவில் அடிபட்டுக் கிடந்தேன். அதனால் நான் ஒதுங்கி இருந்தேன். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருகிறேன்.

இரண்டு அணிகள் இணைவது முக்கியம். ஆனால் ஏன் இணைய வேண்டும் என்பது முக்கியம். பசுக்கள் தனியாக இருந்தால் சிங்கம் அவற்றை எளிதாக வேட்டையாடும். ஆனால் அந்த சிங்கமே தனியாக இருந்தால் சிறு நரி கூட மோதிப் பார்க்கும். இரட்டை இலை என்பது சின்னம் இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம். ஆகையால் நான்கு ஆண்டு கால ஆட்சிக்காக இல்லாமல் நானூறு ஆண்டுகள் ஆனாலும் கட்சியும் அம்மாவும் மக்கள் மனதில் இருப்பதற்காக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது என் விருப்பம். ஜெயலலிதாவுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். அதனைக் காப்பாற்ற என் கடைசி மூச்சு இருக்கும்வரை கட்சிக்காக உழைப்பேன்.

இவ்வாறு நடிகை விந்தியா கூறினார்.