ரஜினியின் அரசியல் பேச்சு: மு.க.ஸ்டாலின், திருமாவளவன், தமிழிசை கருத்து

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

சூப்பர் ஸ்டார் கடந்த பல வருடங்களாக அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்து வந்தாலும் நேற்று அவர் ரசிகர்களிடையே கூறிய கருத்து சற்று வித்தியாசமாக இருந்தது. இதுவரை அரசியலுக்கு வருவதை அவர் நேரடியாக அறிவிக்காத நிலையில், தற்போது அரசியலுக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வேன், யாரை ஒதுக்கி வைப்பேன் என்றெல்லாம் கூறியதை அவரது ரசிகர்களும், அரசியல் விமர்சகர்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து சில அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் இஷ்டம். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால், அதனை வரவேற்பேன்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் விருப்பம். பாஜக அவரை வைத்து தமிழகத்தில் காலூன்ற துடிக்கின்றது. அவர் அரசியலுக்கு வந்தால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அதை வரவேற்கும்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்: 'நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம், ஊழலை எதிர்ப்பதாக குறிப்பிட்டது தான் பாஜகவின் கருத்து. அவரது பேச்சின்மூலம் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. அவர் அரசியலுக்கு வரும் போது நல்ல கட்டமைப்போடும், நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்பதே என் கருத்து' என்று கூறினார்.