ரெம்டெசிவர் வாங்க போனேன்....!கொரோனா வாங்கி வந்தேன்...! சென்னையில் தொற்று பரவும் அபாயம்...!
- IndiaGlitz, [Thursday,April 29 2021]
சென்னையில் நோய்த்தொற்றை தடுக்கும் ரெம்டெசிவர் மருந்து வாங்க சென்றவர்களுக்கு கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனாவை தடுக்கவும், முச்சுத்திணறலை கட்டுப்படுத்தவும் ரெம்டெசிவர் மருந்து முக்கிய பயன்பாட்டில் இருந்துவருகிறது.இக்காரணத்தால் மருந்தை வாங்குவதற்கு மக்கள் திரளாக வந்து குவிகின்றனர். ஆனால் மருந்தின் முக்கியத்துவம் குறித்து, மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களிட இருந்து இன்னும் பாசிடிவ்வான கருத்துக்கள் வரவில்லை.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்கப்படுவதால், அதிகாலை 3 மணியிலிருந்து இதை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்களும் லைனில் நின்றுகொண்டிருக்கிறார்கள். மருந்து வாங்குவதற்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டாலும், அவை முறையாக பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தனியார் மருந்து நிறுவனங்களில் வரிசையில் அதிக நேரம் நிற்பவர்களை தாண்டி, விற்பனை பிரதிநிதிகளுக்கு மருந்து தருவதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
அதைவிட முக்கியமாக இங்கு கூட்ட நெரிசல் அலைமோதுவதாலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததாலும் மக்களுக்கு கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் இதுபற்றி கண்டுகொள்வதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியிருப்பதாவது,
ரெம்டெசிவர் மருந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அனைவருக்குமானது அல்ல. இதனால் கொரோனா உயிரிழப்பையும் தடுக்க முடியாது. தொற்று பாதிக்கப்பட்ட ஒருசிலருக்கு மட்டுமே, இம்மருந்து பயனுள்ளதாக இருக்கும். அனைத்து மருத்துவமனைகளிலும், தேவையான அளவில் ரெம்டெசிவர் மருந்து உள்ளது. தேவைப்படும் நோயாளிகளுக்கு இம்மருந்து அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் இன்னும் சில தனியார் மருத்துவனைகளில், ரெம்டெசிவர் மருந்தை வெளியில் இருந்து வாங்கிவர மக்களை கட்டாயப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இம்மருந்தை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் சேருவதால், அரசு அதிகாரிகள் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் கூட்டத்தை தவிர்க்க முறையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.