வங்கிக்கணக்கில் தானாக வந்த பணம்: மோடி அனுப்பியதாக நம்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,November 23 2019]

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகருக்கு வேலை தேடி வந்த ஒரு ஹூக்கும்சிங் என்ற இளைஞர் எஸ்.பி.ஐ வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கினார். இந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வந்து கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். பிரதமர் மோடி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்வதாக கூறிய வாக்குறுதியைத்தான் நிறைவேற்றி உள்ளதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை எடுத்து அவர் செலவு செய்ய ஆரம்பித்துள்ளார். இதன் பின் சில நாட்களில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஹூக்கும்சிங் கணக்கை ஆரம்பித்த அதே நாளில் அதே பெயரை உடைய இன்னொருவரும் அதே எஸ்பிஐ வங்கியில் வங்கி கணக்கை ஆரம்பித்துள்ளார். ஒரே பெயரில் இருவர் ஒரே நாளில் வங்கிக் கணக்கு ஆரம்பித்ததால் வங்கி அதிகாரி தவறுதலாக இருவருக்கும் ஒரே வங்கி எண்ணை கொடுத்துள்ளார்.

இதனால் வங்கிக் கணக்கை ஆரம்பித்த இன்னொரு ஹூக்கும்சிங் தன்னுடைய வங்கி கணக்கில் பணம் போட்டு கொண்டே இருக்க, அதை வேலை தேடி வரும் ஹூக்கும்சிங் எடுத்து செலவு செய்து கொண்டே இருந்திருக்கின்றார்.

இந்த நிலையில் பணத்தை போட்டு கொண்டிருந்த ஹூக்கும்சிங் ஒரு நாள் தற்செயலாக தன்னுடைய வங்கி கணக்கில் இருக்கும் இருப்பை சரிபார்த்தபோது மிகவும் குறைவாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் வங்கியில் புகார் செய்தபோது தான், வங்கி அதிகாரிகளுக்கு தங்களுடைய தங்களுடைய தவறு தெரியவந்தது.

இதனை அடுத்து பணத்தை செலவு செய்த ஹூக்கும்சிங் அழைத்து அவர்கள் விசாரணை செய்தபோது அவர் அப்பாவியாக ’பிரதமர் மோடி தான் தன்னுடைய அக்கவுண்டில் பணம் போட்டு இருப்பார் என்றும் அதனால்தான் அந்த பணத்தை எடுத்து செலவு செய்ததாகவும் கூறினார். தற்போது இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.