மாணவர்கள் கோரிக்கையை 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றிய முருகதாஸ்
- IndiaGlitz, [Friday,January 27 2017]
உலகமே வியக்கும் வகையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஒரு அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தை, அந்த அரசே வெற்றி பெற்றதாக கூறியது இதுவரை வரலாற்றில் இல்லை. அந்த அளவுக்கு இந்த போராட்டம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த போராட்டத்தின் நடுவே மாணவர்கள் ஏற்படுத்திய இன்னொரு முக்கியமான விழிப்புணர்வு வெளிநாட்டு பானங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்பதுதான். இந்த கோரிக்கையும் தற்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. மார்ச் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு பானங்களை விற்பனை செய்யப்போவதில்லை என தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் அறிவித்ததை பார்த்தோம்
இந்நிலையில் இந்த பானங்களால் தமிழகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் தனது 'கத்தி' படத்தில் கூறியிருப்பார். இதுகுறித்து தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கத்தி படத்தின் கதை எழுத ஆரம்பத்ததில் இருந்தே வெளிநாட்டு பானங்களை அருந்துவதை நிறுத்திவிட்டதாகவும், தற்போது தன்னுடைய படப்பிடிப்பு தளத்தில் அவ்வகை பானங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளதாகவும் கூறியுள்ளார். முருகதாஸ் போன்றே மற்ற இயக்குனர்களும் தங்களுடைய படப்பிடிப்பில் வெளிநாட்டு பானங்களை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.