விஜய்யின் அரசியல் பிரவேச வதந்தி குறித்து எஸ்.ஏ.சி விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,March 29 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று ஒருபுறம் கடந்த பல ஆண்டுகளாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இளையதளபதி விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற விவாதமும் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியபோது, '10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர விரும்பினேன். அதில் அதிக ஆர்வம் காட்டினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ் பெற முடியும், அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். காலப்போக்கில் அரசியல் சுத்தப்படுத்த முடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன்.
தற்போது தமிழகத்தில் எப்படிப்பட்ட அரசியல் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இதுபோன்ற அரசியலை பார்த்தது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது மகன் அரசியலுக்கு வர நான் விருப்பப்படவில்லை. விஜய் அரசியலுக்கு வரமாட்டார்' என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டி வெளியானதில் இருந்து விஜய் அரசியலுக்கு வருவதை எஸ்.ஏ.சி தடுத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எஸ்.ஏ.சி தற்போது விளக்கம் அளித்துள்ளார் அந்த விளக்கத்தில், 'விஜய் அரசியலில் நுழைய மாட்டார் என நான் எப்போதும் கூறியதில்லை. அவரை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என முதலில் எனக்கு ஆசை இருந்தது. ஆனால் தற்போது அரசியல் ஒரு சாக்கடையாகிப் போய்விட்டது. எனவேதான் எனது ஆசையை நான் ஒத்தி வைத்திருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இந்த விஷயத்தில் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும் என்பது எனக்கு தெரியாது' என்று கூறியுள்ளார்.