கல்லூரியில் சேரும் முன் இந்த படத்தை பாருங்கள்: 'செல்பி' இயக்குனர்
- IndiaGlitz, [Sunday,March 27 2022]
தமிழகம் ஒருபக்கம் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக உருவாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கல்வித்துறையில் மாபியாக்கள் நுழைந்து உள்ளதை தான் இந்த ’செல்பி’ படம் எடுத்துக் காட்டுவதாகவும் இந்த ஆண்டு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு முன் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் இயக்குனர் மதிமாறன் தெரிவித்துள்ளார் .
ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’செல்பி’. இந்த படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் மதிமாறன் பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே கார் வாங்கி விட்டார், அந்த காரை ஒரே வருடத்தில் விற்றுவிட்டு புதிய கார் வாங்கினார் என்றும் இது எப்படி என நான் ஆராய்ந்து பார்த்தபோது தான் அவர் கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் புரோக்கர் வேலையை அவர் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது என்றும் கூறியுள்ளார். இது குறித்த திரைக்கதையை தயார் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து உருவான கதைதான் ’செல்பி’ என்று கூறியுள்ளார் .
தமிழகம் இந்தியாவில் மிகச் சிறந்த கல்வி அறிவு பெற்ற மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும் கல்வித் துறையில் எந்த அளவுக்கு மாபியாக்கள் புகுத்துள்ளனர் என்பதை இந்த படம் எடுத்துக் காட்டும் நம்புகிறேன் என்றும் இந்த ஆண்டு கல்லூரியில் சேரும் முன்பே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ், கெளதம் மேனன், வர்ஷா பொம்மலா, வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.