அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்காதது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்
- IndiaGlitz, [Tuesday,March 13 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலைக்கு கிளம்பியபோது அவரிடம் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் 'வணக்கம்' என்று மட்டும் கூறிவிட்டு ரஜினிகாந்த் சென்றுவிட்டார்.
இதுகுறித்து பலர் கேலியும் கிண்டலும் செய்து ரஜினியை விமர்சனம் செய்தனர். அமைச்சர் ஜெயகுமார், சாமி இமயமலைக்கு மலையேறிவிட்டதாக கூறினார். ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல் கூட 'காவிரி விவகாரம் என்றில்லை பல விஷயங்களில் அவர் பதில் சொல்ல மறுக்கிறார். அந்த இடத்திலிருந்து நழுவுகிறார்' என ரஜினியை விமர்சனம் செய்திருந்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் சற்றுமுன் டேராடூனில் ரஜினிகாந்த் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: இப்போது ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்து உள்ளேன். நான் ஒரு யாத்ரீகராக இங்கு வந்து உள்ளேன். இதில் அரசியல் பேசுவதற்கு எதுவும் கிடையாது. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை, இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை, அதனால் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.