அரசியல்வாதிக்குரிய தகுதி என்னிடம் இல்லை: பாரதிராஜா
- IndiaGlitz, [Saturday,July 21 2018]
50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வந்திருந்தால் இந்நேரம் தான் முதல்வர் ஆகியிருப்பேன் என்றும், அரசியல்வாதிகளுக்குரிய முக்கிய தகுதியான சாணக்கியத்தனம், தந்திரங்கள் தன்னிடம் இல்லை என்றும் இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
பாரதிராஜா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் 'ஓம்', இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பாரதிராஜா பேசியதாவது:
அவசியமிருந்தால் 50 ஆண்டுக்கு முன்பே அரசியலுக்கு வந்து இந்நேரம் முதலமைச்சராகியிருப்பேன். முன்பே அரசியல் ஆரம்பித்து இருந்தால், இந்நேரம் நான் தான் முதலமைச்சர். அனைவருமே தொடர்ந்து என்னை வற்புறுத்தி வருகிறார்கள். கடந்த மாதம் கூட மிகப்பெரிய அரசியல் கட்சித் தலைவர் அழைத்தார். பெரிய பதவியெல்லாம் தருகிறோம் என்று அழைத்தும் கூட நான் போகவில்லை.
என் மறைவின் போது மிகப்பெரிய கலைஞன் மறைந்துவிட்டான் என்று தான் இருக்க வேண்டும். மிகப்பெரிய அரசியல்வாதி என்று இருக்கக் கூடாது. என் உடம்பு நல்ல கலைஞனாக மட்டுமே போக வேண்டும், அரசியல்வாதியாக போகக் கூடாது.
உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு, வெளியே ஒன்று பேசத் தெரியாது. அரசியல்வாதிக்கு சாணக்கியத்தனம், தந்திரங்கள் வேண்டும். அதெல்லாம் என்னிடமில்லை. ஆகையால் என்னால் அரசியல்வாதியாக முடியாது.
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.