கமல் கட்சிக்கு ரஜினி ஆதரவா?

வரும் மக்களவை தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு ரஜினியிடம் கேட்டிருப்பதாகவும், அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, எந்தவொரு பெரிய கட்சியின் கூட்டணி இன்றி கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுகின்றது. இந்த தேர்தலில் கமல் கட்சி பெறும் வாக்கு சதவிகிதத்தை வைத்துதான் அவரது அரசியல் எதிர்காலம் கணிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது கட்சிக்கு ஆதரவு தருமாறு ரஜினியிடம் நேரில் சென்று கேட்டுள்ளதாகவும் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கமல் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ஆதரவு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்றும், தண்ணீர் பிரச்சனையை யார் தீர்ப்பார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களிக்கவும் என்றும் ரஜினிகாந்த் ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்ற கட்சி தலைவர்களை விமர்சிக்கும்போது ரஜினியையும் அவ்வப்போது கமல்ஹாசன் மறைமுகமாகவும் நேரடியாக விமர்சனம் செய்துள்ளார். அவ்வாறு விமர்சனமும் செய்துவிட்டு அவரிடம் ஆதரவும் கேட்பது முரண்பாடாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.