இரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்
- IndiaGlitz, [Saturday,May 15 2021]
என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உயிர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர், இருவருமே கொரோனாவுக்கு பலியாகினர் என்று சொல்வதை விட சரியான நேரத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்காததால் பலியாகி உள்ளனர் என்பதால் நான் ஏன் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என தமிழ் நடிகை ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.ஜே.சூர்யா நடித்த ’அன்பே ஆருயிரே’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல இந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை நிலா என்ற மீரா சோப்ரா. இவர் சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய உறவினர்கள் இருவரை கொரோனாவால் இழந்துள்ளார். இதுகுறித்து அவர் ஆவேசமாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’கடந்த சில நாட்களில் நான் எனது நெருங்கிய உறவினர் இருவரை இழந்துவிட்டேன். அவர்கள் கொரோனாவால் மறைந்தார்கள் என்று சொல்வதைவிட தேவையான மருத்துவ வசதி கிடைக்காமல் இறந்தார்கள் என்று தான் கூற வேண்டும்
என்னுடைய முதல் உறவினருக்கு தீவிர சிகிச்சை படுக்கை பெங்களூரில் கிடைக்கவில்லை. அதேபோல் இரண்டாவது உறவினருக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதனால்தான் இருவரும் இறந்தனர். எங்கள் குடும்பத்தில் உள்ள இழப்புகள் போல் இன்னும் எத்தனையோ பேர்களுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான ஆக்சிஜன் மருந்துகள் படுக்கைகள் இன்னும் சரிவர ஏற்பாடு செய்யவில்லை. அரசுகள் மிகவும் மெத்தனமாக உள்ளன. மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றக்கூடிய வேண்டிய நிலையில் தான் உள்ளனர். தீவிர சிகிச்சை படுக்கை, ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காத நிலையில் நான் ஏன் 18% ஜிஎஸ்டி கட்ட வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் ஜிஎஸ்டி கட்டும் ஒவ்வொருவரும் குரல் கொடுக்கத் தொடங்கினால் என்ன ஆகும் என்பதை மத்திய அரசு சிந்தித்து உடனடியாக தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.