'நான் எந்த தப்பும் பண்ணவில்லை' - வசுந்தரா
Send us your feedback to audioarticles@vaarta.com
`வட்டாரம்`, `பேராண்மை`, `போராளி` ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வசுந்தரா. `தென்மேற்கு பருவக்காற்று`, `சொன்னா புரியாது` ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார்.. அனைத்துப் படங்களிலும் இவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும் தொடர்ந்து இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் இவரது அந்தரங்க படங்கள் டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் பரவின. சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு இணைய இதழ்களும் இதைச் செய்தியாக வெளியிட்டதால் வசுந்தராவின் திரைவாழ்க்கை கேள்விக்குறியானது. வசுந்தரா வட மாநிலத்துக்கு குடிபெயர்ந்துவிட்டார், இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.
ஆனால் வசுந்தரா இதற்கெல்லாம்அஞ்சி ஓடி ஒளியவில்லை. தற்போது `புத்தன் ஏசு காந்தி`; `மைக்கேல் ஆகிய நான்` ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ”நான் எந்தத் தப்பும் பண்ணவில்லை. அதனால் ஓடி ஒளிய வேண்டியதில்லை உலகத்தில் எத்தனையோ பேருக்கு இப்படி நடந்துள்ளது. ஆனால் நம் நாட்டில் மட்டும்தான் இதை வெறிபிடித்ததுபோல் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கின்றனர். இதை ஷேர் செய்யும் ஒவ்வொரு ஆணும் தன் வீட்டில் தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை நினைத்துப் பார்க்க வேண்டும்“ என்று துணிச்சலாகவும் நேர்மையாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு சில மாதங்களுக்கு செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு இருக்க நேர்ந்ததாகச் சொல்லியிருக்கும் வசுந்தரா, இதனால் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தையும் தள்ளிப்போட்டிருக்கிறார். .
இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் `புத்தன் ஏசு காந்தி` படத்தில் செய்யாத குற்றத்துக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுவிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றப் போராடும் பத்திரிகையாளராக நடிக்கிறாராம். இந்தப் படத்தை இயக்கும் வெற்றிவேல், சந்திரசேகர் ஆகிய இருவருமே பத்திரிகைத் துறையிலிருந்து வந்தவர்கள் என்பதால் இந்தப் படம் நிச்சயம் தன் திரைவாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தும் படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தமிழில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்று சொல்லியிருக்கும் வசுந்தரா ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளாராம்.
வாழ்த்துக்கள் வசுந்தரா!!!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments