மறுபடியும் என்னால் 'அன்பே சிவம்' போல் ரிஸ்க் எடுக்க முடியாது: சுந்தர் சி
- IndiaGlitz, [Friday,March 01 2019]
என்னிடம் ரசிகர்கள் ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் காமெடி படத்தைத்தான் எதிர்பார்க்கின்றனர். கருத்து கூறும் வகையில் 'அன்பே சிவம்' போன்ற படங்களை இனி என்னால் இயக்க முடியாது. அதனால் தான் நல்ல சமூக கருத்துக்களை கூறும் படங்களை தயாரித்து வருகிறேன்' என்று இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப்ஹாப்தமிழா ஆதி நடித்துள்ள 'நட்பே துணை' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிலையில் 'நட்பே துணை' படம் குறித்து சுந்தர் சி கூறியபோது, 'மீசையை முறுக்கு, 'நட்பே துணை; போன்ற சமூக கருத்துக்களை கூறும் படங்களை என்னால் இனிமேல் இயக்க முடியாது. அவ்வாறு இயக்கினால் அது 'அன்பே சிவம்' போல் ஆகிவிடும். அதனால் தான் இதுமாதிரி கருத்து சொல்லும் படங்களை தயாரித்து வருகிறேன்.
ஒருவேளை 'மீசையை முறுக்கு' திரைப்படம் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஆதியை வைத்து ஒரு படம் தயாரிக்க நானும் எனது மனைவி குஷ்புவும் முடிவு செய்திருந்தோம். ஆனால் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அதேபோல் நல்ல கருத்து கூறும் கதையான 'நட்பே துணை' கதையை ஆதி என்னிடம் கூறினார். இந்த படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமானாலும் ஸ்கிரிப்ட் மேல் உள்ள நம்பிக்கையால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன்' என்று சுந்தர் சி தெரிவித்துள்ளார்.