ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்ய தயார்: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Saturday,September 16 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு ஆகியவை காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆளுமையுள்ள தலைவருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒரு புதிய தன்னலமில்லா தலைவரை எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் வரவு குறித்த செய்திகள் புதிய நம்பிக்கையை அளித்தன. இருப்பினும் இருவரும் தனித்தனியாக அரசியலுக்கு வருவவதை விட இணைந்து வந்தால்தான் அரசியல் போரில் வெற்றி பெற முடியும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், ரஜினி விரும்பினால் எனது அணியில் இணைத்துக்கொள்ளவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இருவரும் ஏற்கனவே பல வருடங்களாக நண்பர்களாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசனின் இந்த அழைப்பிற்கு ரஜினி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசிய கமல்ஹாசன், ''நான் தொழிலுக்காக நடித்து வருகின்றேன். ஆனால், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம் அஹிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம். மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயாராக இருக்கிறேன். எனது வாரிசுகளுக்காக அரசியலுக்கு வருவதாக கூறவில்லை மாற்றம் தேவை என்றுதான் அரசியலுக்கு வருவதாக கூறினேன்' என்று கூறினார்.