முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆர்வம்: சூர்யா

  • IndiaGlitz, [Wednesday,May 29 2019]

ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் ஊடகம் ஒன்றுக்கு நடிகர் சூர்யா பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் ஆந்திர தேர்தலில் சரித்திர சாதனை வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்து சரியான திரைக்கதையுடன் என்னை யாராவது அணுகினால் அந்த படத்தில் நான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூரரை போற்று' திரைப்படம் முழுமையான வாழ்க்கை வரலாற்றுப் படமல்ல என்றும், கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் பணிகளில் ஊக்கமடைந்து, அந்தக் கதையைத் திரைப்படத்துக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளதாகவும் சூர்யா கூறினார். இயக்குனர் சுதாவை தனக்கு 'ஆயுத எழுத்து' காலத்தில் இருந்து தெரியும் என்றும், அவரது திறமை மீது தனக்கு மிகுந்த மதிப்பு உண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.