டிரம்ப் கட்சியின் கொ.ப.செ ஆக கஸ்தூரி?
- IndiaGlitz, [Tuesday,October 31 2017]
கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி விரைவில் திமுகவில் சேரவிருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. குஷ்புவுக்கு பதிலாக கஸ்தூரி திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருப்பார் என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் திமுக உள்பட எந்த கட்சியிலும் சேர போவதில்லை என்றும், தான் உண்மையில் சோத்துக்கட்சி என்றும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பத்திரிகையாளர்கள் என்னை ஏதாவது அரசியல் கட்சியில் சேர்த்து விடுவது, உறுப்பினர் அட்டை வாங்கி கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. நடுநிலைவாதிகளுக்கு நமது ஊரில் இந்த பிரச்சினை உண்டு தான்.
ரஜினியை விமர்சித்தபோது பாமக என்றார்கள், சந்தித்தால் ரஜினி ஆதரவாளர் என்றார்கள். கங்கை அமரன் அவர்களுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் ஆதரவு தெரிவித்தேன். அவருக்காக பரப்புரை ஆற்றினேன். அப்பொழுது என்னை பாஜக-வில் இணையப் போகிறேன் என்று பேசினார்கள். அடுத்து சீமான் அவர்களுடன் மேடையில் பேசியதால் நாம் தமிழரில் கஸ்தூரி என்றார்கள். இப்பொழுது திமுக பிரச்சார பீரங்கி என்கிறார்கள்.
நல்ல வேளை அடிக்கடி அமெரிக்கா பறக்கிறார். டொனால்ட் டிரம்ப் கட்சியின் கொ.ப.செ ஆக கஸ்தூரி நியமனம் என்று சொல்லாமல் விட்டார்களே' என்று கஸ்தூரி கூறியுள்ளார்.