முத்துவேல் கருணாநிதி எனும் நான்....! ஸ்டாலின் பதவியேற்பு விழாவிற்கு வந்த துரை தயாநிதி...!


திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் இன்று மிகவும் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க, 33 அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றனர். இந்நிகழ்வில் துர்கா ஸ்டாலின் கண்கலங்கிய தருணம், காண்போரை நெகிழச் செய்தது. இந்த விழாவில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வம், பாஜக சார்பாக இல.கணேசன், மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், சரத்குமார், வேல்முருகன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அழகிரி பங்கேற்கவில்லை....

இத்தனை முக்கிய அரசியல் புள்ளிகள் கலந்து கொண்ட இந்த விழாவில், முக.ஸ்டாலினின் அண்ணார், முக.அழகிரி பங்கு பெறுவார் என குடும்பத்தினர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வராமல் மகன் துரை தயாநிதியை விழாவிற்கு அனுப்பி வைத்திருந்தார்.

கலைஞர் கருணாநிதி இருக்குபோதே ஸ்டாலின் குடும்பமும், அழகிரி குடும்பமும் மனக்கசப்பில் இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இறுகுடும்பத்தாருக்கு இடையில் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த நிலையில், மகன்கள் மட்டும் பேசிக்கொண்டு வந்தனர். தேர்தல் சமயத்தில் கூட, ரஜினி கட்சி துவங்கினால் அழகிரி அவருக்கு ஆதரவு தருவார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாகவே வந்துள்ளது. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தை ஆட்சி புரிய இருக்கிறது திமுக. இந்த நிலையில் தான் அண்மையில் அழகிரி என் தம்பி தமிழக முதல்வராவது எனக்கு பெருமையாக உள்ளது என அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருந்தது. ஸ்டாலினின் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு அழகிரி வருவார், சமரசம் செய்யலாம் என குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அழகிரி மகன் துரை தயாநிதி விழாவிற்கு வந்ததும், அனைவருக்கும் மகிழ்ச்சி என்றே சொல்லலாம்.