முதல்வர் ஆக விரும்புகிறேன்: முதல்முறையாக மனம் திறந்த கமல்

  • IndiaGlitz, [Friday,September 22 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தீவிர அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் டுவிட்டரில் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் ஆட்சியாளர்கள் திணறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் கருத்துக்களுக்கு பொதுமக்களின் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது

பொதுமக்களின் இந்த ஆர்வம்தான் கமல்ஹாசனை அரசியலுக்கு வர தூண்டியுள்ளது. இந்த நிலையில் மக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் ஆக விரும்புவதாக முதல்முறையாக கமல்ஹாசன் மனம் திறந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

அந்த பேட்டியில் கமல் மேலும் கூறியபோது, 'அரசியல் என்பது புதைகுழி என்று நினைப்பவர்களின் மனதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மக்களின் பிரச்சனையை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவர்களின் பிரச்சனையை தீர்க்கும் ஒருவரை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். முதலில் நான் அரசியல்வாதி ஆகும் முன்னர் என்னை தயார் செய்ய போகிறேன். அதற்கு மக்களை நேரில் சந்திப்பதுதான் சரியான வழி. மக்களை சந்திக்கும் என்னுடைய சுற்றுப்பயணத்தை விரைவில் அறிவிப்பேன்

எந்த ஒரு மாற்றத்தையும் உடனடியாக கொண்டு வருவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை, ஆனால் மாற்றத்திற்காக தலைவணங்க காத்திருக்கின்றேன்

நான் ஒரு பகுத்தறிவாளன், கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்பதை விட மக்களின் அன்பை மதிக்கின்றேன். மக்களுக்கு உதவி செய்வதற்காக முதல்வராகி அவர்களுக்கு உதவும் ஒரு கருவியாக இருக்க விரும்புகிறேன்' என்று கமல் கூறியுள்ளார்.