நான் இந்த இயக்குநரின் தீவிர ரசிகன்… மனம் திறக்கும் ஜகமே தந்திரம் நடிகர் ஜோஜு ஜார்ஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ஜகமே தந்திரம்” திரைப்படம் வரும் ஜுன் 18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் தன்னை மிகவும் ஈர்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என மனம் திறந்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், நான் “பீட்சா” படம் பார்த்துவிட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை. நான் மலையாளத்தில் பிரபலமாகத் தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. கடைசியாக ஜகமே தந்திரம் படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை சந்தித்தேன். இந்தப் படத்தில் நடிக்க ஆடிசன் செய்தார். படத்தில் மிகப்பெரிய பாத்திரம் என்பதால் தெரிந்த அரைகுறை தமிழில் நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். ஆனால் அவர் என்னை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தில் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டு தற்போது பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் சுப்பிரமணியம் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் தன்னை மிகவும் கவர்ந்த இயக்குநர் என கார்த்திக் சுப்புராஜ் குறித்து மனம் திறந்து இருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜை தவிர ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, நடிகை ஐஸ்வர்யா லஷ்மி போன்றோரும் நடித்துள்ளனர். இதற்கு முன்பு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பீட்சா”, “ஜிகிர்தண்டா”, “இறைவி”, “பேட்ட” போன்ற திரைப்படங்கள் வெளியாகி பெரும் கவனம் ஈர்த்தன. அந்த வகையில் ஜகமே தந்திரம் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.