'சிங்கம்' சீரீஸ் படங்களை இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி
- IndiaGlitz, [Sunday,June 28 2020]
இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் பலர் வீட்டிற்கு கூட செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் கொரோனா வைரசிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக இரவுபகலாக பாடுபட்டனர். காவல்துறையின் இந்த பணி மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. ஆனால் சாத்தான்குளம் சம்பவம் இந்த நன்மதிப்பை குழிதோண்டி புதைத்துவிட்டது.
சாத்தான்குளத்தில் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் காவல்துறையின் ஒட்டுமொத்த நன்மதிப்பை கெடுத்து விட்டார்கள் என்று தற்போது குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. சாத்தான்குளம் விவகாரம், தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வேகமாக பரவி காவல்துறையினர் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.
இந்த நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தை கண்டித்து தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலர் கண்டித்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் ஹரி அவர்கள் காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று மிகவும் மனம் நொந்து கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் நடந்து விடக்கூடாது. இதற்கு ஒரே வழி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறல் இந்தத் துறையையே களங்கப்படுத்தியுள்ளது. காவல் துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று இயக்குனர் ஹரி அதில் கூறியுள்ளார். இயக்குனர் ஹரியின் இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஹரி காவல்துறையை பெருமைப்படுத்தி சாமி, சாமி 2, மற்றும் சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என மொத்தம் 5 திரைப்படங்களை காவல்துறையை பெருமப்படுத்தி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.