"முதலில் நான் இந்தியன்.. மாணவர்களுக்காக கவலைப்பட வேண்டியது நம் கடமை" - இர்ஃபான் பதான்.
Send us your feedback to audioarticles@vaarta.com
``அரசியல் பழி சொல்லும் விளையாட்டு தொடரட்டும். ஆனால், நானும் என்னுடைய நாடும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குறித்தும் அவர்களின் போராட்டம் குறித்தும் கவலைப்படுகிறோம்” என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் டிசம்பர் 15-ம் தேதி ட்வீட் செய்திருந்தார். இந்த நாளில்தான் டெல்லி காவல்துறையினர் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தியது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக இர்பானின் குரல் வெளிப்பட்டது. இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு இர்பான் பேட்டியளித்துள்ளார்.
அதில், என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே தொடர்கிறேன்... ``2004-ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது லாகூரில் உள்ள கல்லூரிக்குச் சென்றோம். ராகுல் டிராவிட், எல்.பாலாஜி, பார்த்தீவ் பட்டேல் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். 1,500 மாணவர்கள் கூடியிருந்த அரங்கில் நாங்கள் உரையாற்றிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு மாணவி எழுந்தார் மிகவும் ஆத்திரத்துடன், இஸ்லாமியராக இருந்துகொண்டு இந்தியாவுக்காக ஏன் விளையாடுகிறீர்கள் என என்னை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.
`இந்தியா என் நாடு, இந்திய நாட்டுக்காக விளையாடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். என்னுடைய மூதாதையர்கள் அங்குதான் இருந்தனர் எனப் பதிலளித்தேன்’ நான் கூறியதைக் கேட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். பாகிஸ்தானில் திறந்த வெளியில் என்னால் அப்படிப் பேச முடிந்தது என்றால் என் தாய் நாடான இந்தியாவில் என்னுடைய கருத்தைத் தெரிவிக்க யாருடைய அனுமதியும் எனக்கு தேவையில்லை. நான் என்னுடைய தேசத்தின் சார்பாக விளையாடினேன். நான் இந்தியாவுக்காக பந்துவீச ஓடி வரும்போது நான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன் என எண்ண மாட்டேன். முதலில் நான் ஒரு இந்தியன் அதன்பின்னர் எனக்கு எல்லாம் என்பதை இங்கிருக்கும் சிலர் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஜாமீயா குழந்தைகளா இல்லை. நம்முடைய குழந்தைகள். வடகிழக்கு மாநிலத்தின் குழந்தைகளா, காஷ்மீர், குஜராத் குழந்தைகளா. அவர்கள் எல்லாரும் நம்முடைய குழந்தைகள். ட்விட்டரில் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்தேன். அதன் உண்மைத் தன்மையை பலமுறை ஆராய்ந்து விட்டுத்தான் மாணவர்கள் மீதான என்னுடைய கருத்தைப் பதிவு செய்தேன். அவர்கள்தாம் நம்முடைய எதிர்காலம்.
இந்தத் தேசத்தை அவர்கள்தாம் முன்னெடுத்துச் செல்லப்போகிறார்கள். யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது. மாணவர்களை ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால், அவர்கள்தாம் நம்முடைய எதிர்காலம். அவர்கள் ஏதேனும் தவறுசெய்தால் அவர்களை அமைதியான பாதைக்குக் கொண்டு வர நிறைய வழிகள் உள்ளன. அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தபோது உங்களுக்கு என்ன பிரச்னை.இந்தச் சமூகம் தொடர்பான கருத்தை நான் முன்வைத்தால் தவறா? டிஜிட்டல் யுகத்தில் சமூகவலைதளத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்பும் பல அக்கவுன்டுகள் போலியானவை என்பது எனக்கு தெரியும். நான் பேச வேண்டும் என நினைத்தேன், பேசினேன். பின்னர் இப்போது நிறைய பேர் பேசிவருகின்றனர். என் ட்வீட்டின் பின்னணியில் உள்ள நோக்கத்தை மக்கள் புரிந்துகொள்ள முயல்வார்கள் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments