சிறு வயதில் சூப்பர் ஸ்டாரின் இந்தப் பாடலுக்கு நான் அடிமை… முன்னணி நடிகரின் மலரும் நினைவுகள்!

  • IndiaGlitz, [Monday,March 01 2021]

நடிகர் சூர்யாவின் தம்பியும் தற்போது தமிழில் முன்னணி நடிகராகவும் இருந்து வரும் நடிகர் கார்த்தி, தன்னுடைய சிறு வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த My name is Billa பாடலுக்கு நான் அடிமை என்றும் இந்தப் பாடல் டிவியில் ஒலிக்கும் போதெல்லாம் டெனிம் ஜாக்கெட்டையும் பேன்டையும் அணிந்து கொள்வேன் எனத் தெரிவித்து இருக்கிறார். மேலும் அப்படி டெனிம் ஜாக்கெட்டையும் பேன்டையும் அணிந்த தனது சிறு வயது புகைப்படம் ஒன்றையும் நடிகர் கார்த்தி தன்னடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இயக்குநர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் பில்லா. இந்தத் திரைப்படம் இந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த “டொன்” எனும் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழில் மறக்க முடியாத ஒரு வெற்றிச் சாதனையைப் படைத்தது எனலாம். அதில் இடம்பெற்ற ஒரு பாடல் தான் My name is Billa. இந்தப் பாடலுக்கு 80 களில் மட்டும் அல்ல, தற்போதைய இளைஞர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தில் இடம் பிடித்த இன்னொரு பாடல் “வெத்தலைய போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி“ இதற்கும் இளைஞர்கள் பலர் அடிமையாகி இருந்தனர். இந்த வெற்றிக்குப் பிறகு தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா வரிசை 2 படங்களும் வசூல் சாதனையை படைத்தது. என்றாலும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பில்லா என்றும் மங்காத நினைவுகளாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி தானும் சிறு வயதில் சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக இருந்தேன் எனத் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவரது ஸ்டைலை பார்த்து பூரித்த விஷயத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.