"எனக்கும் தனி கைலாசா அமைக்க ஆசை" - இயக்குனர் பேரரசு.
- IndiaGlitz, [Tuesday,December 10 2019]
எனக்கும் தனி கைலாசா அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என 'நான் அவளை சந்தித்த போது' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.
சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் அவளை சந்தித்த போது'. எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், பேரரசு, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, எனக்கும் தனி கைலாசா அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு நான்கு சிஷ்யகைகள் தேவை. அதற்கு நடிகர் சாம்ஸ் தான் உதவ வேண்டும். ’நான் அவளை சந்தித்த போது’ என்ற இந்தப் படத்தின் டைட்டிலைக் கேட்டவுடன் எல்லோருக்கும் பழைய ஞாபகம் வந்துள்ளது. ஆனால் யாருக்கெல்லாம் மனைவி ஞாபகம் வந்துள்ளது என்று தெரியவில்லை.அப்பா பாசம், தந்தை பாசம் உள்ள படங்கள் பார்க்கும் போது கூட அவர்கள் மீது பாசம் கூடுவதில்லை. ஆனால் காதல் படங்கள் பார்த்தால் காதல் கூடிவிடும். நல்ல காதல் கதைகள் உள்ள படங்களைப் பார்க்கும் போது நல்ல காதலைச் செய்யத் தோன்றும். அப்போது வெளிவந்த படங்கள் பெண்களை நல்லவிதமாகப் பார்க்க வைத்தது. பாக்யராஜ் சாரின் படங்கள் எல்லாம் பார்க்கும் போது நம் மனது கெட்டுப்போக வில்லை. ஆனால் இன்று இளைஞர்கள் கெட்டுப்போவதற்கு சினிமாவே காரணமாக இருக்கிறது.
கல்யாணத்திற்கு முன்னாடியே ஆண் பெண் இணைந்து வாழ்வது இப்போது மிகச் சாதாரணமாகி விட்டது. பெண்கள் மூன்று வகையால் மாட்டிக்கொள்கிறார்கள். ஆண்களை நம்பி தன் வாழ்க்கையை ஏமாந்து போகிறார்கள். அவர்களைத் தான் பாக்யராஜ் சார் எச்சரித்து இருந்தார். ’மெளன கீதங்கள்’ என்ற படம் மூலமாகத் தமிழ்நாட்டின் மொத்தப் பெண்களுக்கும் பிடித்த இயக்குநராக மாறியவர் பாக்யராஜ் சார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ததிற்குப் பின்னால் பெரிய சூழ்ச்சி இருக்கிறது.இன்று செல்போனாலே பாதி வாழ்க்கைப் பறிபோகிறது. பெண்கள் அமைப்பிற்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன். பாக்யராஜ் சார் பெண்களுக்கான இயக்குநர் என்று பேசினார் இயக்குநர் பேரரசு.