2 மாத குழந்தையை 45 ஆயிரத்துக்கு விற்ற தாய்: கொரோனா ஊரடங்கால் வறுமை?
- IndiaGlitz, [Thursday,August 13 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வேலை இன்றி வருமானம் இன்றி கோடிக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வறுமை காரணமாக பலர் விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு மாத குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் வறுமை காரணமாக சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டு வந்ததை அடுத்து கணவர் கோபித்துக் கொண்டு கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டார். ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி இருந்த அந்தப் பெண், தற்போது கணவரும் தன்னைவிட்டு கோபித்துக் கொண்டு சென்றதால் செலவுக்கு பணமில்லாமல் குழந்தையையும் காப்பாற்ற முடியாமல் திண்டாடி உள்ளார்
இதனை அடுத்து ஒரு சில தரகர்கள் மூலம் குழந்தையை விற்பனை செய்ய அவர் முடிவு செய்தார். இதனை அடுத்து 45,000 ரூபாய் பெற்றுக்கொண்டு அவர் தனது குழந்தையை விற்று விட்டார். இந்த நிலையில் கோபித்துக் கொண்டு சென்ற கணவன் திரும்பி வந்து குழந்தை எங்கே என்று கேட்டபோது குழந்தையை விற்றுவிட்டதாக கூறியதும் கணவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்
இதனை அடுத்து அவர் தனது மனைவி உள்பட 6 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அந்த பெண் உள்பட 6 பேரை கைது செய்து விற்பனையான குழந்தையை தேடி வருகின்றனர் வறுமை காரணமாக 45,000 ரூபாய்க்கு பெற்ற தாயே தனது குழந்தையை விற்ற சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது