ஐஐடி தேர்வில் சமோசா விற்பவரின் மகன் செய்த சாதனை

  • IndiaGlitz, [Tuesday,June 13 2017]

இந்தியத் தொழில்நுட்பக் கழகமான ஐஐடி-யில் சேர்ந்து படிக்க ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஜெஇஇ (JEE) என்ற நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். இதன்படி, நடப்பாண்டில் ஐஐடியில் சேர்வதற்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தேர்வில் ஐதராபாத்தை சேர்ந்த மோகன் அப்யாஸ் என்பவர் 64வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

மோகன் அப்யாஸ் தந்தை ஐதராபாத்தில் ஒரு சிறு உணவகம் ஒன்றை கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் விற்கப்படும் சமோசா வருமானத்தில் தான் அவருடைய குடும்ப செலவு மற்றும் மகன் மோகனின் கல்விச்செலவு அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

ஐஐடி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து மோகன் கூறியபோது, 'என கனவு நனவாகிவிட்டது. நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன். சென்னை ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது ஆசை. எனது பெற்றோர்களுக்கு உதவியாக இருந்து எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதே எனது நோக்கம். மேலும் எனக்கு விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவும் உண்டு' என்று கூறியுள்ளார்.

மோகனின் தந்தை சுப்பாராவ் தனது மகனின் வெற்றி குறித்து கூறியபோது, "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவன் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை படிப்பான். அவன் 10-வது வகுப்பில் படிக்கும் வரை விற்பனைக்குத் தேவையான சமோசாக்களைச் செய்வதற்கு உதவியாக இருப்பான்," என்றார்.