மனைவியின் தகாத உறவு… காதலனின் கழுத்தை அறுத்து ரத்தத்தைக் குடித்த கணவன்!

  • IndiaGlitz, [Monday,June 26 2023]

கர்நாடக மாநிலத்தில் வசித்துவந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவியுடன் தனது நண்பனே தகாத உறவில் ஈடுபட்டு வந்ததை அறிந்து, அவரது கழுத்தை அறுத்து, ரத்தத்தை அருந்திய கோரமான வீடியோ சமூகவலைத் தளத்தில் வெளியாகி கடும் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்திலுள்ள பட்லபள்ளி பகுதியில் வசித்து வருபவர் விஜய். 35 வயதான இவருக்கும் மாலா என்ற 28 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் சிந்தாமணி எனும் பகுதியில் விஜய் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் மாண்டியாம்பள்ளி எனும் ஊரைச் சேர்ந்த மாரேஷ் என்ற 32 வயது நபரும் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

ஒரே இடத்தில் மாரேஷ், விஜய் இருவரும் துணி வியாபாரம் செய்துவந்த நிலையில் இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நட்பு வீடு வரைக்கும் நீடித்த நிலையில் விஜய்யின் மனைவி மாலாவிற்கும் மாரேஷ்க்கும் இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் இருவரும் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த விஜய் முதலில் அவர்கள் இருவரையும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் விஜய்யின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மாரேஷ், மாலா இருவரும் செயல்பட்டு வந்ததால் விஜய் கடும் கோபம் அடைந்துள்ளார். இதையடுத்து மாரேஷை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற விஜய், தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் அவருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் மேலுள்ள கோபத்தினால் கத்தியை வைத்து அவரது கழுத்தை அறுத்ததோடு வழிந்த ரத்தத்தை குடித்துள்ளார். இதை அருகில் இருந்த விஜய்யின் நண்பர்கள் வீடியோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த மாரேஷை வனப்பகுதிக்கு வந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது மாரேஷ் உயிர் தப்பியுள்ளார். ஆனால் வனப்பகுதியில் ரத்தம் குடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடந்த சில தினங்களாக கடும் பீதியை ஏற்படுத்தியது.

இதையடுத்து விஜய் மற்றும் அவரது நண்பர்களை கைதுசெய்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தகாத உறவில் ஈடுபட்ட தன்னுடைய மனைவியின் காதலனை கழுத்தை அறுத்து இரத்தத்தை அருந்திய இந்தச் சம்பவம் தற்போது கர்நாடக பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.