கொரோனாவால் இருந்து குணமான தம்பதி தற்கொலை: அதிர்ச்சி காரணம்
- IndiaGlitz, [Tuesday,August 04 2020]
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உடல்நலத்தை பாதிப்பதோடு, பெரும்பாலானோர்களுக்கு மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமான தம்பதியர் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அக்கம்பக்கத்தினர் ஒதுக்கிய காரணத்தாலும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனந்தபூர் என்ற பகுதியை சேர்ந்த வெல்ல வியாபாரி பனிராஜ். இவர் தனது மனைவி சிரிஷா மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பனிராஜ் மற்றும் அவருடைய மனைவி சிரிஷா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஏற்கனவே கொரோனாவால் பனிராஜ் தாயார் உயிரிழந்த நிலையில் தம்பதிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் ஒருசில நாட்களுக்கு முன்னர் தம்பதிகள் இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மீண்டும் தங்களது தொழிலை வழக்கம் போல் செய்ய முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் கொரோனாவில் இருந்து மீண்ட இந்த தம்பதியிடம் பேசுவதை தவிர்த்ததாகவும், அவர்களிடமிருந்து வெல்லம் வாங்குவதை நிறுத்தி கொண்டதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே கடன் தொல்லையால் அவதிப்பட்டு இந்த தம்பதியர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களை ஒதுக்குவதை அறிந்ததும் மனமுடைந்தனர். இதனால் இருவரும் தங்கள் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.