டேட்டிங் ஆப் மூலம் 16 லட்சத்தை இழந்த சென்னை இளைஞர்… மோசடி கும்பல் அட்டூழியம்!
- IndiaGlitz, [Saturday,March 06 2021]
சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டேட்டிங் ஆப் மூலம் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இழந்து விட்டதாகப் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்த மத்தியக் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கணவன், மனைவி இருவரை கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்யும் டேட்டிங் ஆப்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த மனிஷ் குப்தா எனும் இளைஞர் Menx her எனும் ஆப்பின் மூலம் 16,5000 தொகையை இழந்து விட்டதாகப் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து சைபர் கிரைம் உதவியுடன் மத்தியக் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த திபான்க்ர் காஸ்னி வாஸ், யாசிம் கான் ரசூல் பெக் எனும் இரு ஆண்களை குறிவைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டதாக மும்பை போலீஸ் கணவன், மனைவி இருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னையை சேர்ந்த இளைஞரையும் இந்த தம்பதி ஏமாற்றியது தெரியவந்தது. எனவே மும்பை விரைந்த மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கியதோடு தம்பதியை கைது செய்து சென்னை நீதிமன்றத்தில் ஒப்படைத்து உள்ளனர். மேலும் இந்த மோசடி கும்பல் ஏற்கனவே ஆபாச வீடியோ எடுத்த வழக்கிலும் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.