பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழந்த பரிதாபம்!!!
- IndiaGlitz, [Friday,November 27 2020]
துபாய் ஒட்டியுள்ள புறநகர் பாலைவனப் பகுதிகளில் ஆதரவற்று பல ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உயிர் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்படி பராமரிப்பின்றி இருக்கும் ஒட்டகங்கள் மேய்ச்சலுக்கு வழியில்லாத காரணத்ததால் சுற்றுலா பயணிகள் போடும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு அதனால் நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தகைய ஒட்டகங்களை பராமரிப்பதற்கு எனத் தனியாக கால்நடை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அப்படி அமைக்கப்பட்ட குழு ஒன்று கடந்த சில நாட்களில் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு உயிரிழந்த நூற்றுக்கணக்கான ஒட்டகங்களின் எலும்புக் கூடுகளை கண்டுபிடித்து உள்ளன. மேலும் இதேபோல அப்பகுதியில் 300 ஒட்டகங்கள் உயிரிழந்ததற்கான அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒட்டகங்கள் உட்கொண்ட மொத்த கழிவுகள் 53 கிலோ எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
பொதுவாக பாலைவனத்தின் புறநகர் பகுதிகளில் இருக்கும் ஒட்டகங்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. பட்டிணி காரணமாக இந்த ஒட்டகங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று விடுகிறது. அப்படி உண்ணும் பிளாஸ்டிக் கழிவுகள் ஜீரணமாகாமல் தொடர்ந்து ஒட்டகங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவித்து விடுகிறது. இந்தக் கழிவுகள் அவை உயிரிழந்து எலும்புக்கூடாக மாறிய பின்பும் அப்படியே பாலைவனப் பகுதிகளில் மக்காமல் உருண்டை உருண்டையாக இருக்கும் காட்சி பார்ப்போரை பதை பதைக்க வைக்கிறது.