முகம் காட்டாமல் உதவும் மாமனிதர்...! தூத்துக்குடியில் செழிக்கும் மனிதநேயம்....!
- IndiaGlitz, [Monday,May 24 2021]
கொரோனா நோயால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது என்று சொல்லலாம். இக்கட்டான சூழலிலும் உதவும்,சமூகத்தின் மீது அக்கறையுள்ள பல மனித நேயமுள்ள மனிதர்கள் இருந்து தான் வருகிறார்கள்.
அப்படிப்பட்ட மனித நேயமுள்ளவர் தான் பழவியாபாரி முத்துப்பாண்டி. இவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர். பசியால் வாடும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்து வருகிறார் இவர்.
கடலையூர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். அரசு அனுமதித்த நேரத்தில் மட்டும் கடையை நடத்துகிறார். இதன்பின்பு கடையை பூட்டிவிட்டு, அதன் முன் 5 வாழைப்பழத்தார்களை கட்டித்தொங்க விட்டுள்ளார். அதனுடன் சிலேட்டுப்பலகையில், பசித்தால் எடுத்து சாப்பிடவும்.! பழம் இலவசம்.! வீணாக்க வேண்டாம்.! என்றும் எழுதிப்போட்டுள்ளார். அங்கு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் பழத்தை சாப்பிட்டு பசியாறி செல்கின்றனர்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, பசியோடு வருபவர்களுக்கு பசியாற்றுகிறேன், இந்தநேரத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று கூறுகிறார் முத்துப்பாண்டி.