விவசாயிகள் படுகொலை… சொந்த கட்சிக்கு எதிராக நடிகை குஷ்பு காட்டம்!
- IndiaGlitz, [Wednesday,October 06 2021]
உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும், மனித உயிரைவிட எதுவும் முக்கியமில்லை என்று நடிகை குஷ்பு காட்டமாகத் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அம்மாநில துணைமுதல்வர் கேசவ் மவுரியா ஆகிய இருவரும் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள இருந்தனர். இந்த விழாவிற்குச் செல்ல வந்த அமைச்சரின் காரை வழிமறித்து விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த வாகனம் ஒன்று விவசாயிகள் நின்றிருந்த கூட்டத்தில் திடீரென பாய்ந்து கோர விபத்தை ஏற்படுத்தியது.
இதனால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி கடந்த சில தினங்களாக உலகையே உலுக்கி வருகிறது. இந்த விபத்துக்கு அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ராதான் காரணம் என்று விவசாயிகள் அமைப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில் பாஜக இந்தச் சம்பவம் குறித்து வாய்த்திறக்காமல் இருக்கிறது.
இந்நிலையில் காரை ஏற்றி விவசாயிகளைக் கொன்ற சம்பவத்தைக் கண்டித்து பாஜக பிரமுகரான நடிகை குஷ்பு காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் “உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 8 பேரை கொன்றது கடுமையான குற்றம். எந்த விதத்திலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை வேண்டும். மனித உயிரைவிட எதுவும் முக்கியமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்“ என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாஜக சார்பாக தேசிய செய்தி தொடர்பாளர் பதவி நடிகை குஷ்புக்கு கொடுக்கப்பட இருந்ததாகவும் அதை அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் சொந்தக் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாகவே விமர்சித்து இருக்கிறார். இந்நிலையில் காரை ஏற்றி விவசாயிகளை கொன்ற விவகாரத்திற்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர்.
A vehicle mowing down 8 protesters in UP is unacceptable and a grave crime. Whoever responsible for this must be booked and taken to task, irrespective of who this person is. Nothing matters more than human lives. Humanity is thy the essence of this country.
— KhushbuSundar (@khushsundar) October 5, 2021