ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட சோகம்: ஒரு சகோதரியின் கண்ணீர் ஆடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆன்லைன் ரம்மியால் பல குடும்பங்கள் சீரழிந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய வாசகர்களில் ஒருவரான சகோதரி ஒருவர் தனது கணவர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானதால் ஏற்பட்ட அனுபவம் குறித்து நம்மிடையே ஆடியோ மூலம் பகிர்ந்துள்ளார். அந்த ஆடியோவில் அவர் கூறியதாவது:
எங்கள் குடும்பத்தில் சுதந்திரமாக பயம் இல்லாமல் வாழ்ந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது. அப்படி என்ன வாழ்க்கையில் எனது கஷ்டம் என்றால் அதற்கு ஒரே காரணம் இந்த ஆன்லைன் செயலி தான். இது எங்கிருந்துதான் வந்ததோ? யார் இதை கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. பல பேர்களின் வாழ்க்கையை இது அழித்துக் கொண்டிருக்கின்றது
சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் எனது கணவர் ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் இந்த ஆன்லைன் ரம்மியை விளையாட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் போரடிக்கும் நேரம் வீட்டில் இருக்கும் போது இந்த விளையாட்டு விளையாடலாம் என்று ஆரம்பித்தார். ஆரம்பத்தில் விளையாட்டாக 25 ரூபாய், 50 ரூபாய் என ஆரம்பித்த அவர் அதன்பின் ஆயிரம் இரண்டாயிரம் என வைத்து விளையாடினார். ஒரு கட்டத்தில் அவர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார். அவர் எப்போது அடிமையாகி விட்டார் என்று எனக்கு தெரியவில்லை
24 மணி நேரமும் விளையாடுவார், அம்மா அப்பா மனைவி குழந்தைகள் என குடும்பத்தில் யார் சொன்னாலும் கேட்காமல் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் விளையாடிக் கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாடினால் வீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பார்கள் என வீட்டை விட்டு வெளியே சென்று ஓட்டலில் ரூம் போட்டு எல்லாம் விளையாடுவார். ஒரு கட்டத்தில் எங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று விளையாடி தோல்வியடைந்த பின் கடன் வாங்கி விளையாடி ஆரம்பித்தார். அவரை திருத்துவதற்கு நாங்கள் செய்யாத முயற்சிகளே இல்லை
ஒரு கட்டத்தில் அவரை இந்த விளையாட்டில் இருந்து விடுவிப்பதற்காக மருத்துவரிடமும் ஆலோசனை செய்தோம். அவர்கள் மருந்துகளை மட்டுமே கொடுத்தனர். அந்த மருந்துகளை சாப்பிடும்போது அவர் மயக்க நிலையில் இருந்ததால் அவர் ஒரிரு நாட்கள் விளையாடாமல் இருந்தார். ஆனால் மயக்க நிலை தெளிந்ததும் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். அவருக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அவரால் அந்த விளையாட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை
அந்நியன் படத்தில் வரும் கேரக்டர் போலவே அவர் திடீர் திடீரென மாறிக் கொண்டே இருந்தார். மிகப் பெரிய அளவில் நஷ்டம் வந்த போதிலும் அந்த பழக்கத்தை விட முடியாத அவர் என்னை இந்த பழக்கத்தில் இருந்து என்னை காப்பாற்று என்று கெஞ்சியுள்ளார். ஆனால் மறுநாளே அவர் மீண்டும் ரம்மி விளையாட்டை தொடருவார்.
மிகப்பெரிய அளவில் நஷ்டம் வந்தால் மட்டுமே நிறுத்துவார். ஒரு தடவை விஷம் குடிக்க கூட முயற்சி செய்தார். இதனால் நான் அவரை கவனித்துக் கொள்வதற்காக ஒவ்வொரு நிமிடமும் அவர் கூடவே இருந்தேன். அவரை விட்டு விலகினால் அவருக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது
இந்த விளையாட்டில் மட்டும் அவர் ஒன்றரை கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்தார். அவர் சம்பாதித்த பணம், அவருடைய அப்பா வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணம், நான் போட்டுக் கொண்டு வந்த நகை உள்பட எல்லாமே விற்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி இப்போது 20 லட்ச ரூபாய் கடனில் நாங்கள் இருக்கிறோம். இப்பவாவது அவர் இந்த பழக்கத்தை விடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பலனில்லை.
சமீபத்தில் இந்த விளையாட்டுக்கு தடை என்றவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தடை காரணமாக அவர் ஒரு நாள் மட்டும் விளையாடவில்லை. ஆனால் மீண்டும் அவர் அடுத்த நாள் முயற்சித்த போது அந்த கேம் ஒர்க் ஆனது. அதனால் அவர் மீண்டும் விளையாட தொடங்கிவிட்டார்
தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கேம் செயலிகளை தடை செய்ய வேண்டும். இந்த விளையாட்டு விளையாடினால் தண்டனை என்று கூறினால் மட்டும் திருந்த மாட்டார்கள். நீங்கள் கொடுக்கும் தண்டனையால் மட்டும் அவர் திருந்தி விடுவார்களா? மருத்துவர்கள் இதுகுறித்து என்ன கூறுகிறார்கள் என்றால் அவரிடம் இந்த விளையாட்டை விளையாட வேண்டுமென்று தூண்டும் வகையில் ஒரு கெமிக்கல் ரியாக்சன் நடக்கிறது அதை நிறுத்துவது கடினம் என்கிறார்கள்
இப்போது நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதற்கு ஒரே தீர்வு தமிழக அரசும் மத்திய அரசும் இந்த விளையாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்பது மட்டுமே. இப்படியே போனால் ஒரு கட்டத்தில் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டது போல் ஒருநாள் தற்கொலை செய்து கொள்வார் அல்லது அனைத்து சொத்துக்களையும் இழந்து பரதேசி போல் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுவார். ஒரு குடும்பத்திற்கு கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே நிலைதான். நாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த காசும் போய், உயிரும் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம். தயவுசெய்து இந்த விளையாட்டை தடை செய்து எங்களை போன்ற பல குடும்பங்களை காப்பாற்றுங்கள்’ என்று அந்த சகோதரி சோகத்துடன் ஆடியோவில் கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout