தூத்துக்குடி அருகே நடுக்கடலில் 500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்…பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Thursday,November 26 2020]

 

தூத்துக்குடி பகுதி அருகே நடுக்கடலில் வந்த ஒரு படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடலோர காவல் படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் கடந்த 17 ஆம் தேதி முதல் தூத்துக்குடி கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் 3 கப்பல்களில் தீவிர சோதனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனையை அடுத்து நேற்று முன்தினம் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ஒரு கப்பலை கடலோர காவல் படையினர் சோதனைக்கு உட்படுத்தியபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அந்தப் படகில் வைக்கப்பட்டு இருந்த காலியான எரிபொருள் கேனில் 99 பாக்கெட்டுகளில் ஹெராயின் இருந்ததாகவும் அதன் மதிப்பு ரூ.500 கோடியைத் தாண்டும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த படகின் அடிப்புறம் 20 பெட்டிகளில் போதைப் பொருள் கலக்கப்பட்ட மாத்திரைகள் இருந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது. அதைத்தவிர 9mm அளவுள்ள 5 கைத்துப்பாகிகள் மற்றும் தடைச்செய்யப்பட்ட துரையா வகை சோலார் செல்பேசியும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பறிமுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை சென்னைக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர்கள் சென்னைக்கு வந்தவுடன் மத்தியப்புலனாய்வு துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் கடலோர காவல் படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு படகில் இருந்து ஹெராயின் போதைப் பொருள்களை பணம் கொடுத்து வாங்கி வந்து அதை ஆஸ்திரேலியா மற்றும் பேல மேற்கத்திய நாடுகளுக்கு சப்ளை செய்ய இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. நிவர் புயலுக்கு நடுவே ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தூத்துக்குடி பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.