பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி? விளக்க முறை!
- IndiaGlitz, [Wednesday,May 19 2021]
கொரோனா வைரஸ் தொற்று முதலில் மனித நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த வைரஸ் தீவிரம் அடையும் போது சுவாசக் கோளாறை உண்டாக்குகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பான ஒரு விஷயமாகவே தற்போது மாறிவிட்டது. அதிலும் வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இதுபோன்ற குறைபாடுகள் அதிகமாகவே காணப்படுகின்றன.
இதுபோன்ற நிலைமைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உண்டாகும் ஆக்சிஜன் பற்றாக்குறையை அறிந்து கொள்ளவும் அவர்களது ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்கவும் பல்ஸ் ஆக்சி மீட்டர் எனும் ஒரு கருவி தற்போது பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதுவும் வீட்டில் இருந்தபடியே கொரோனா நோயாளிகள் இந்தக் கருவியைக் கொண்டு தங்களது ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த பல்ஸ் ஆக்சி மீட்டர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
ஆக்சி மீட்டரை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு இடத்தில் அமர்ந்து குறைந்தது 10 நிமிடம் வரையிலும் அந்த நபர் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டும்.
பின்னர் வலது கை ஆள்காட்டி விரல் அல்லது நடுவிரலில் கருவியைப் பொருத்த வேண்டும்.
ஒரு கருவியை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பயன்படுத்தும்போது கிருமிநாசினியை தெளித்து பாதுகாப்பாக பயன்படுத்துவது அவசியம்.
ஆக்சி மீட்டரை பொருத்திய சில வினாடிகளில் கருவியில் தசம எண்களைப் போன்று இரண்டு கோடுகள் தெரியும் அதில் மேல் இருப்பது ஆக்சிஜன் அளவு. கீழ் இருப்பது இதயத்துடிப்பு. இந்த அளவுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை விரல்களில் மருதாணி பூச்சு அல்லது நகப்பூச்சு, ஈரம் மற்றும் குளுமை இருந்தால் ஆக்சிஜன் அளவைத் தவறாகக் காட்டலாம். எனவே இது குறித்து விழப்பாக இருக்க வேண்டும்.
ஒரு நபருக்கு ஆக்சிஜன் அளவு 95-100% வரை இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் 94%க்கும் குறைந்தால் மருத்துவரின் உதவியை உடனடியாக நாட வேண்டும். மேலும் கூடுதல் மருத்துவ உதவிக்கு 104 இலவச சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.