கொரோன பரவல் நேரத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் கடும் அச்சுறத்தலை ஏற்படுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கடும் மன அழுத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஓடியாடி விளையாடும் குழந்தைகளை நான்கு சுவற்றிக்கு நடுவில் பூட்டி வைக்க முடியாமலும் வெளியே செல்ல அனுமதிக்க முடியாமலும் பல பெற்றோர்கள் திணறிக் வருகின்றனர். இந்நிலையில் சில பாதுகாப்பு வழிமுறைகளை குழந்தைகளுக்கு, மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படும்போது மேலும் பாதிப்புகள் அதிகமாவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில மாதங்களில் குழந்தைகளும் வெளியே செல்வதற்கான தேவைகள் கூட எழலாம். இந்தக் காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு பெற்றோர்கள் சில பாதுகாப்பு வழிமுகைளை தங்களது குழந்தைகளுக்கு இப்போதே பழக்கப் படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். வளர்ந்த, ஓரளவு விவரம் குழந்தைகள் முதல் அனைவருக்கும் அடிக்கடி கைகளை கழுவுவதற்கான பயிற்சிகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் கைகளை எப்படி கழுவுகிறார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் பக்கத்தில் உள்ள யாரைப் பார்த்தாலும் அவரிடம் ஓடி விடக்கூடாது. உற்றார், உறவினர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் பக்கத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு தேவையான, முறையான பயிற்சியை பெற்றோர்கள்தான் தங்களது குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். தங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே மற்றவர்களின் அருகில் செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு கண்டிப்பாகச் சொல்லித்தர வேண்டும். அவர்கள் எதிர்காலத்தில் வெளியே சென்றாலும் 6 அடி தூரம் தள்ளி நிற்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மற்றவர்கள் தும்மினாலோ, இருமினாலோ உடனடியாக தங்களது வாய், மூக்கை துணியோ அல்லது டிஷ்யூ பேப்பரையோ கொண்டு மறைப்பதற்கு குழந்தைகளைப் பழக்கப் படுத்த வேண்டும்.
எப்போதும் கைகளில் டிஷ்யூ பேப்பர், கைக்குட்டைகள் போன்றவற்றை உபயோகிப்பதற்கு முறையான பயிற்சியை வழங்க வேண்டும். விளையாடும்போது கதவுப் பிடிகள், படிக்கட்டின் பிடிகள் போன்றவற்றை தொடுவதை தவிர்ப்பதற்கும் அவர்களை பழக்க வேண்டும். வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு அல்லது வேறு எங்கே சென்றாலும் முறையாக கைகழுவுதை குழந்தைகள் மறக்கக் கூடாது. அவர்களாக செய்யும் விதத்தில் பழக்கப் படுத்த வேண்டும்.
மேலும், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் விதத்தில் அடிக்கடி இளநீர் அல்லது எலுமிச்சை சாறை கொடுக்கலாம். இந்நேரத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவில் இருந்து தள்ளி இருப்பதற்கு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் கழிப்பறை சுத்தம் இவ்விஷயத்தில் அதிக முக்கியம். மேலும் குழந்தைகளுக்கு இன்புளூயன்சா தடுப்பூசி போடப்படாமல் இருந்தால் அதையும் இப்போதே செய்து விடலாம். இந்தத் தடுப்பூசி கொரோனாவை குணப்படுத்தாது என்றாலும் காயச்சல் வராமல் தடுக்கும். ஏனெனில் கொரோனா பரவும் இந்நேரத்தில் நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஆபத்துதான். அதனால் முடிந்தவரை சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்களை அடிக்கடி சுடுநீர் கொண்டு சுத்தப்படுத்துவதும் நலம். குழந்தைகளுக்கு ஓய்வான நல்ல தூக்கமும் அவசியம். ஊட்டச் சத்துள்ள பொருட்கள், பழங்கள், காய்கறிகளை சரிவிகிதத்தில் கொடுக்க வேண்டும். வைட்டமின் டி கொரோனா விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொண்டதாக பேசப் படுகிறது. முடிந்த வரை குழந்தைகளை காலை சூரியனில் நிற்க அனுமதிக்கலாம். அசைவ உணவுகள் மூலம் கொரோனா பரவுகிறது என்ற பொய்யான வதந்திகளும் ஒருபக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலுக்கும் அசைவ உணவு முறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. முறையான விதத்தில் சுத்தப்படுத்தப் பட்ட அசைவ உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஆன்டிபாயடிக் போன்ற மருந்துகள் கொரோனாவில் இருந்து காப்பாற்றும் என்ற பொய்யான வதந்திகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் உறுதிப்படுத்தப்படாத தகவல். எனவே ஆன்டிபாயடிக் மருந்துகளை உபயோகப்படுத்த வேண்டாம். கொரோனா பரவல் நேரத்தில் வீட்டு மருந்துகளை அல்லது கபசுர நீர் போன்வற்றை பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் கூட எழுகிறது. இந்த மருந்துகள் கொரோனா வைரஸை எதிர்க்காது. ஆனாலும் கொரோனா பரவலுக்கு வழி வகுக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். எனவே இந்த மருந்துகளை உபயோகிப்பதில் எந்த தவறும் இல்லை எனவும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா பரவாது என்பதெல்லாம் உறுதிப் படுத்தப்படாத ஆய்வு முடிவு. நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால் கொரோனா வைரஸை எதிர்த்து போராட முடியுமே தவிர, நோய் எதிர்ப்பு ஆற்றலினால் கொரோனா பரவலில் இருந்து காப்பாற்ற முடியாது. எனவே இதுபோன்ற வதந்திகளையும் நம்ப வேண்டாம் என மருத்துவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். முறையாக முகக்கவசத்தை அணியவும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெருந்தொற்று நேரங்களில் அதிகக் கண்டிப்பும் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு தள்ளிவிடும். எனவே முறையான அக்கறையுடன் குழந்தைகளுக்கு இந்த நோய்ப் பரவலைப் பற்றி எடுத்து சொல்வதும் முக்கியம்.
அதோடு சாதாரண இருமல், சளிக்கும் கொரோனா நோய்த் தொற்றுக்குமான வித்தியாசம் தெரியாமல் பலர் அவதிப்படும் நிலைமையும் ஏற்படுகிறது. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மட்டும் இருந்தால் அது ஃப்ளூ நிமோனியாகவாக இருக்கலாம். இருமல், காய்ச்சலோடு மூச்சுத்திணறலும் சேர்ந்து கொண்டால் அது கொரோனா அறிகுறி. பலருக்கு இந்தியாவில் கொரோனா எந்த அறிகுறியும் இல்லாமல் நோயை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே குழந்தைகள் விஷயத்தில் எந்த சாதாரண அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பெற்றோர்கள் பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றினாலே பெரும்பாலும் குழந்தைகளுக்கு நோய் அண்டாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com