பயமுறுத்தும் டெங்கு… பரவலைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?
- IndiaGlitz, [Tuesday,November 02 2021]
ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் டெங்கு, சிக்கன்குனியா, வைரல் காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்டுத்தக்கூடிய தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரம் பெற்றிருக்கிறது.
கடலூரில் இதுவரை 30க்கும் மேற்பட்ட மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.
டெங்கு பாதிப்பு
ஏடிஎஸ் கொசு கடி மூலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தக் கொசு நன்னீரில் வாழக்கூடியது. மேலும் இது பகல் நேரத்தில் மட்டுமே அதிகளவில் மனிதர்களை கடிக்கிறது.
டெங்கு பாதிப்பு ஏற்பட்ட ஒரு நபருக்கு காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, தோல் வெடிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
டெங்கு காய்ச்சலில் 4 வகைகள் இருப்பதாக கூறும் மருத்துவர்கள் 2 மற்றும் 4ஆம் வகை டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
டெங்கு கொசு சுத்தமான தண்ணீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். எனவே வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
வீட்டைச் சுற்றி பழைய டயர், காலியான பாட்டில்கள், பேப்பர் கப்கள் மற்றும் தேங்காய் தொட்டி, இளநீர் தொட்டிகள் இல்லாதவாறு தூய்மையாக பரமரிக்க வேண்டும்.
டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து வாழ்வதற்கு வெறுமனே 10மி நல்ல தண்ணீர் போதும் என்பதால் வீட்டைச் சுற்றி துளியளவு கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
வீட்டில் தண்ணீரை சேமித்து வைத்துள்ள தொட்டிகள், குடம், டேங்குகள் போன்றவற்றை நன்றாக மூடி வைப்பது நலம். இந்த நன்னீரில் கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்றை எளிதாக வரவழைத்துவிடும்.
மேலும் வீட்டில் தண்ணீர் சேகரித்து வைத்திருக்கும் கலன்களை அடிக்கடி ப்ளீச்சிங் பவுடர் போட்டு தேய்த்து கழுவ வேண்டும்.
குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரில்கூட டெங்கு கொசு உற்பத்தி ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே நாம் நடமாடும் பகுதிகளில் எங்குமே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
டெங்கு கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் என்பதால் வீட்டைத் தவிர பணிபுரியும் இடம், அலுவலகங்களிலும் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மழை காலத்தில் தண்ணீரை காய்ச்சி வடிக்கட்டி அருந்த வேண்டும்.
மேலும் கழிப்பறைக்கு சென்றுவிட்டும் திரும்பும்போது கைகளை சோப்பு போட்டு கழுவுவது நல்லது.
அதேபோல சாப்பிடும் போதும், உணவு சமைக்கும்போதும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும்.
டெங்குவால் வரும் பாதிப்பு
டெங்கு காய்ச்சல் பாதித்தவருக்கு ஈறுகள் மற்றும் மூக்கில் ரத்தப்போக்கு ஏற்படும். காரணம் ஏற்கனவே அவரது ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் இந்த ரத்தப்போக்கை தடுப்பது கடினம்.
சிறுநீர், மலம் அல்லது வாந்தியில் கூட ரத்தப்போக்கு இருக்கும்
சருமத்தின் கீழ் ரத்தப்போக்கு சிராய்ப்பு போல தோன்றலாம்
சில சந்தர்ப்பங்களில் உடலின் உள் உறுப்பில் ரத்தம் உறைய வாய்ப்பு இருக்கிறது.
டெங்குவால் உயிரிழப்பு
சாதாரணமாக ஒருவருடைய ரத்தத்தில் 1 லட்சம் முதல் 4 லட்சம் ரத்தத்தட்டு எனப்படும் பிளேட்லெட்கள் இருப்பது அவசியம். ஆனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போகிறது.
டெங்கு நோய் ஒருவருடைய ரத்த அணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி பிளேட்லெட்களின் எண்ணிக்கையை குறைத்து விடுகிறது. இதனால் அந்த நபருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் ரத்தம் உறையும் தன்மையும் இல்லாமல் போய்விடுகிறது.
ரத்தத்தில் இருக்கும் பிளேட்லெட்களை நமது முட்டிக்காலில் இருக்கும் Bone Marrow உற்பத்தி செய்கிறது. ஆனால் டெங்கு பாதிப்பினால் ஒருவருடைய ஃபோன் மேரோ சுருங்கி பிளேட்லெட்களின் எண்ணிகையை சுருக்கி விடும்.
எனவே டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை மருத்துவர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். ஒருவேளை 10 ஆயிரத்திற்கும் கீழ் பிளேட்லெட்களின் எண்ணிக்கை செல்லும்போது அவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து தானம் பெற்று பிளேட்லெட்டுகளை செலுத்த வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.
அதேபோல டெங்கு பாதித்த நபருக்கு தானாகவே நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகள் தோன்றும். இந்த ஆன்டிபாடிகள் கூட பிளேட்லெட்களின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறது.
டெங்கு பாதித்தவருக்கு ஒருவேளை சிறிய அளவில் காயம் ஏற்பட்டால் கூட அதுவே எமானாக முடிந்துவிடலாம். எனவே டெங்குவிற்கான அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனை அணுக வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக “வருமுன் காப்பதே நலம்“ என்ற அடிப்படையில் வீட்டைச் சுற்றி நன்னீர் தேங்குவதை தவிர்த்தால் நோய்த்தொற்று ஏற்படாது. மேலும் சுய தூய்மையை அதிகளவில் காக்க வேண்டியதும் முக்கியம்.