செலவுகளைக் குறைப்பது எப்படி??? ஒரு எளிமையான வழிமுறை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அத்யாவசியமானது எது, அத்யாவசியமற்றது எது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். கொரோனா நேரத்தில் இதை ஓரளவிற்கு நம்மால் புரிந்து கொள்ளவும் முடிந்தது. ஆனால் இந்நிலைமை இப்படியே நீடிக்குமா என்றால் அதற்குச் சாத்தியம் இல்லை. ஏனெனில் கொரோனா நேரத்தில் பூட்டிக்கிடந்த பொருட்கள் எல்லாம் தற்போது ஆபர் விலைக்கு வந்திருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது அதை வாங்கலாமா? அல்லது இதை வாங்கலாமா என மனம் அலையத் தொடங்கி விடுகிறது. சில நேரங்களில் சும்மா வெளியே சென்று வரலாம் எனக் கிளம்பினால் கையில் இருக்கும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை தேய்த்து விட்டு வந்துவிடுகிறோம். கொரோனா நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று நம்முடைய கூக்குரல் காதுக்கு கேட்டாலும் நாம் விடுவது இல்லை. எதையாவது வாங்கிக்கொண்டு வீடிற்கு வந்துவிடுகிறோம். இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது? செலவை குறைப்பதன் மூலம் பணத்தை எப்படி சேர்ப்பது என்பதற்கு ஜப்பான் மக்கள் பின்பற்றும் ஒரு பழங்கால வழிமுறையைத்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.
ககேயோ என்ற வழிமுறையைப் பின்பற்றி பெரும்பாலான ஜப்பானியர்கள் தங்களது செலவுகளைக் குறைத்து விடுகின்றனர். நம் உள்ளூரிலும் சில நேரங்களில் பொருளாதார ஆலோசகர்கள் இந்த வழிமுறையைத்தான் மக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். உலகம் முழுவதும் இந்த வழிமுறைப் பின்பற்றப் படுகிறது. என்றாலும் ககேயோ என்ற பெயர் அழகாக இருப்பதால் நாமும் அதே பெயரைப் பயன்படுத்தலாம்.
அதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று உங்களது மனது தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு நோட்டையும் ஒரு பேனாவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நோட்டில் சில கேள்விகளைத் தொடர்ந்து எழுத வேண்டும். கேள்வியை எழுதினால் போதும், பதிலை உடனடியாக உங்களது ஆழ்மனம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடும்.
முதல் கேள்வி 1. இந்தப் பொருள் அவசியம் தேவையா ? இது இல்லாமல் இருக்க முடியுமா? 2. இந்தப் பொருளை இப்போது வாங்கக் கூடிய பொருளாதார நிலையில் நாம் இருக்கிறோமா? 3. இந்தப் பொருளை வாங்கினால் எவ்வளவு நாள் உபயோகப் படுத்துவோம்? அல்லது எவ்வளவு நாள் இந்த பொருள் நிலையாக இருக்கும்? அதன் தரம் என்ன? 4. இந்தப் பொருள் எனக்கு எப்படி அறிமுகமானது? நண்பர்கள் சொன்னார்களா? விளம்பரத்தை பார்த்து தெரிந்து கொண்டேனா? 5. இந்த பொருளை வாங்குவதை விட குறைவாக செலவு செய்து மன நிறைவாக இருக்க முடியுமா?? இப்படி 5 கேள்விகளைக் கேட்டுக் கொண்டால் மட்டும் போதும். அந்தப் பொருளை வாங்க வேண்டுமா, வாங்க வேண்டாமா என்ற இறுதி முடிவினை நீங்கள் எளிமையாக எடுத்து விட முடியும். இப்படி செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை குறைக்கவும் முடியும்.
இதைத்தவிர இன்னும் சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதாவது பொருட்களை வாங்கும்போது கிரேடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பணத்தை கையில் வைத்துக் கொண்டு செலவழித்தால் அதன் உண்மையான நிலவரம் பொருட்களின் தரம், தேவை என எண்ணற்ற கேள்விகள் நம் கண் முன்னால் தோன்றுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே முடிந்த வரை கையில் பணத்தை வைத்துக் கொண்டு கடைக்கு செல்வதை பழக்கப்படுத்த வேண்டும். அதிலும் கிரெடிட் கார்டு பழக்கத்தை கைவிடுவதே நல்லது. ஒருவரது தேவையை எவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேற்றுகிறதோ அவ்வளவு சீக்கிரம் கடன் காரனாக்கி விடவும் செய்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
அடுத்துக் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். ஒரு பொருள் தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். தள்ளுபடி என்பது விற்பனைக்காக செய்யப்படும் உக்தியே தவிர உங்களது தேவைக்காக வழங்கப்படும் சலுகை அல்ல. பெரும்பாலான தேவையை இப்போதெல்லாம் தள்ளுபடிகள்தான் தீர்மானிக்கின்றன. எனவே முடிந்த வரை தள்ளுபடிகளை கண்முன்னால் காட்டும் வணிக நிறுவனங்களில் ஆப்களை பார்க்கவே கூடாது. நம்முடைய செல்போனில் வைத்து இருப்பதும் ஒருவித ஆபத்துதான். பொழுது போகாத நேரத்தில் அதைப்பார்த்து இவ்வளவு மலிவான விலையா என பிரமித்து அதில் காசை தொலைத்து விடுவதற்கு அதிக வாய்ப்புண்டு. எனவே இதையும் தவிர்க்க வேண்டும். அடுத்து நாம் செய்ய வேண்டிய இன்னொரு விஷயம் அடிக்கடி நம்முடைய வங்கி கணக்கை சரிப் பார்ப்பது. அடிக்கடி வங்கி கணக்கை சரிப்பார்த்தால் தான் நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? முன்பிருந்த தொகை எப்படி செலவழிந்தது? என சிந்தனை நமக்கு வரும். இந்த வழிமுறையையும் நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஜப்பானியர்கள் பின்பற்றுகின்ற ககேயோ எப்படி நமக்கு உதவியாக இருக்குமோ அப்படி மேற்கண்ட சில வழிமுறைகளும் நமுக்கு பேரூதவியாக இருக்கும். பெரும்பாலான பொருட்கள் வாங்கும்போது தான் நமக்கு திருப்தியைக் கொடுக்கும். வாங்கிய பின்னால் அந்த திருபதி காணாமல் போய்விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி சொல்வதால் பொருட்களை வாங்கவே கூடாது என்பது அர்த்தமல்ல. பொருட்களை தேவையின் அடிப்படையில் தீர்மானிப்பதற்கே இந்த வழிமுறைகள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்வில் எப்போதும் சிக்கனமாக இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. ஏனெனில் அவர்களிடம் போதுமான கையிருப்பு இருக்கும். ஆனால் கையில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மாதத்தின் கடைசியில் அல்லாடும் பெரும்பாலான நபர்களுக்கு இந்த விதிமுறைகள் மிகவும் பயன்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments