பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி??? இன்ஸ்டாகிராமில் குரூப் சேட் செய்த பள்ளி மாணவர்கள்!!!
- IndiaGlitz, [Tuesday,May 05 2020]
டெல்லியில் முக்கிய பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 வகுப்பு பள்ளி மாணவர்கள் செய்த காரியம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. #boyslockerroom என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு குழுவை அமைத்து தன்னுடன் பயிலும் மாணவிகளை எப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது என்பதைப் பற்றி பள்ளி மாணவர்கள் விவாதம் நடத்தியிருக்கின்றனர். இந்த விவாதம் ஒரு பள்ளி மாணவர்களுக்கு இடையில் நடைபெறவில்லை. இதில் பல பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு குரூப் சேட் செய்திருக்கிறார்கள். இதுமட்டும் போதாதென்று, உடன் பயிலும் மாணவிகளின் புகைப்படங்களையும் ஆபாச வீடியோக்களையும் அவர்களின் அனுமதியின்றி பதிவிட்டு இருக்கின்றனர்.
இந்த குரூப் சேட் பற்றிய பதிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளங்களிலும் மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டது. சாதாரண அரட்டைப்போல பள்ளி மாணவர்கள் செய்த காரியத்தைப் பார்த்து அவர்களது பெற்றோர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுதொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் #boyslockerroom குழு முடக்கப்பட்டது.
டெல்லி மகளிர் ஆணையம் இந்த மாணவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பலரும் மாணவர்களின் கீழ்த்தரமான செயலுக்கு வருத்தம் தெரிவித்து வரும் இந்த நேரத்தில், இன்னொரு பக்கம் #boyslockerroom ஹெஷ்டேக் என்ற பெயரில் மிகவும் பரபரப்பாகச் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் குறித்து பகிரப்பட்டும் வருகிறது.