ஒரு நாடாகவே அங்கீகரிக்கப்படாத தைவான் கொரோனாவுக்கு எதிராக சாதித்தது எப்படி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவலைத் திறமையாகக் கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக தைவானும் இருந்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா உலகம் முழுவதிலும் 183 நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் இருந்து வெறுமனே 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தைவான் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 123 ஆவது இடத்தில் இருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும், கடந்த 2003 இல் சார்ஸ் வைரஸ் பரவியபோது கடுமையாகப் பாதிக்கப்பட்ட 17 நாடுகளுள் ஒன்றாக தைவானும் இருந்தது. அதன் எச்சச் சொச்சம் அந்நாட்டின் நினைவுகளில் இன்றைக்கும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
சீனா, கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் இது நிமோனியா மாதிரி இருக்கிறது என்று சந்தேகத்தை வெளிப்படுத்திய தருணத்திலேயே தைவான் தனது செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டது. டிசம்பர் 31, 2019 அன்று கொரோனாவை பற்றி உறுதிப்படுத்தாத தகவல் வெளிவந்த நிலையிலேயே வுஹானில் இருந்து தைவானுக்கு வரும் அனைத்து விமானங்கள் மற்றும் கப்பல் பயணிகளை அந்நாட்டின் அரசாங்கம் தனிமைப்படுத்தி வைத்தது.
தைவானில் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை 380 கொரோனா நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களில் சொந்த நாட்டை சேர்ந்தவர்கள் வெறுமனே 54 பேர். மற்ற 326 பேரும் வெளிநாடுகளில் இருந்து தைவானுக்கு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 5 இறப்புகளும் அன்றைக்கு பதிவாகியிருந்தன.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
முதல்கட்டமாக வுஹானில் இருந்து திரும்பியவர்கள் பற்றி விசாரணை நடத்த தைவான் அரசு ஜனவரி 2 இல் ஒரு குழுவை அமைத்தது. ஜனவரி 20 ஆம் தேதி கொரோனா நோய்க்கான ஒரு கட்டுப்பாட்டு மையத்தையும் (CECC) அது ஏற்படுத்தியது. அந்தக் குழு 3 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு பல்வேறுகட்ட பணிகளை மேற்கொண்டது. 14 நாடுகளுடன் தைவான் கடுமையான எல்லை மூடலை மேற்கொண்டது. கொரோனா அறிகுறி இருப்பவர்களை கண்டறிவது, அவர்களை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் கடுமையான அதிரடிகளை மேற்கொண்டது. பரிசோதனைகள் அதிகப்படுத்தப் பட்டன.
கொரோனா தடுப்புக்கான நடவடிக்கைகளில் தொலைப்பேசி நிறுவனங்களுடன் அந்நாட்டு அரசாங்கம் கைக்கோர்த்து செயலிகள் மற்றும் கொரோனா நோயாளிகளின் பயண வரலாறு போன்றவற்றை கையாண்டன. ஜிபிஸ் மூலமும் பல நோயாளிகளின் பயண வரலாற்றை அந்நாட்டு அரசு கண்டுபிடித்தது. கொரோனா அறிகுறி உள்ள அனைவரையும் வீடுகளில் வைக்காமல் தனி வார்டுகளில் வைத்து அந்நாட்டு அரசு தனிமைப்படுத்தியது. கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக 50 மாகாணங்களில் 167 சமுதாய மருத்துவமனைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. அந்த மருத்துமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வண்ணம் பல வசதிகளும் செய்யப்பட்டன.
மேலும் தைவான், ஜனவரி 24 ஆம் தேதி கொரோனாவை தடுக்க முகக்கவசத்தை தயாரிக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. பிப்ரவரி 6 ஆம் தேதி அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் முகமூடிகளை இலவசமாக வழங்குவதற்கான ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டது. மார்ச் 12 அன்று வரை அனைத்து மக்களுக்கும் முகமூடிகள் வழங்கப்பட்டன. இதைத்தவிர மக்கள் இணையம் வழியாகவும் மருந்து கடைகளிலும் முகக்கவசத்தை வாங்கிக் கொள்ளவும் அந்நாடு அனுமதித்தது. அன்றாட தேவைகளைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டன.
இன்றைக்கு வரைக்கு சீனாவில் அதிகாரத்தின் கீழ் இருக்கும் ஒரு தீவாக மட்டுமே உலக நாடுகளை தைவானை அணுகுகின்றன. ஏனெனில் சீனா ஐ.நா. சபையில் உறுப்பு நாடாக இணைந்துகொள்ளும் போது தைவானை தனி நாடாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இணைந்தது. இதனால் ஐ.நா.வின் அட்டவணையில் தைவான் இன்றைக்கு வரைக்கும் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வில்லை. கொரோனாவுக்கு எதிரான தைவானின் நடவடிக்கைகள் மிகவும் நேர்த்தியாக இருந்ததாக பல நாடுகள் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றன.
கொரோனாவின் மரபணு வரிசையை புரிந்து கொள்ள தைவான் அரசாங்கம் உலகளாவிய நாடுகளுடன் தற்போது இணைந்து பணியாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களால் உலக நாடுகளிடம் இருந்து தனித்து இருக்கும் தைவான் தற்போது பல நாடுகளுக்கு எடுத்துக்காட்டாகச் செயல்பட்டு வருகிறது. உலகச் சுகாதார அமைப்பின் உறுப்பு நாடாகவும் தைவான் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளாவிய பெருந்தொற்று நேரத்தில் இதுபோன்ற நாடுகளுக்கும் WHO வின் புரிந்துணர்வு தேவை என்று தற்போது தைவானுக்கு ஆதரவாகப் பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.
தைவானின் விஞ்ஞானிகள் தற்போது கொரோனா வைரஸ் பற்றிய தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மலேசியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, United Kingdom, பெல்ஜியம், நெதர்லாந்து, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் தைவான் தொடர்பில் இருந்து வருகிறது. தன் நாட்டில் உள்ள பிறநாட்டு பயணிகளின் பயண விவரங்கள் மற்றும் மருந்துகளுக்கான ஆராய்ச்சிகளைக் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தைவானின் பெண் அதிபர் Tsai கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் தற்போது உலக நாடுகளிடையே மிகவும் பிரபலமான மனிதராக அறியப்படுகிறார். இன்று வரை அந்நாட்டில் 438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப் பட்டு இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மற்ற நாட்டு பயணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 6 இறப்புகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. உலக நாடுகளின் சபையில் ஒரு நாடாகவே அங்கீகரிக்கப்படாத தைவான் தற்போது கொரோனா குறித்த ஆய்வை மேற்கொள்ள உலக நாடுகளைப் பார்த்து அறைகூவல் விடுத்து வருகிறது. ஆராய்ச்சியில் தங்களது விஞ்ஞானிகள் மற்ற நாடுகளுக்கு துணையாக இருப்பார்கள் என்றும் Pattern போன்ற எந்த அங்கீகாரமும் தங்களுக்கு தேவையில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. மேலும் இதுவரை உலக நாடுகளுக்கு 1 கோடி முகக்கவசத்தை இலவசமாக அளித்த நாடாக தைவான் சிறந்து விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout