பத்து விரல்களும் இல்லாமல் பி.எச்.டி படித்து முடித்த சாதனைபெண்
Send us your feedback to audioarticles@vaarta.com
கும்பகோணத்தில் கிருஷ்ணன் - ஹேமா தம்பதியரின் மகள் மாளவிகா. சிறுவயதில் வெடிகுண்டு விபத்து ஒன்றால் இரண்டு கைகளையும் இழந்தார். கால்களில் பயங்கர சேதம். ஆனால் அவர் இழக்காதது ஒன்றே ஒன்று தான். அதுதான் தன்னம்பிக்கை. இரண்டு கைகளில் உள்ள பத்து விரல்களும் இல்லை. ஆனால் அவரால் மிக அருமையாக டைப் செய்ய முடியும். அவர் சமீபத்தில் பி.எச்.டி பட்டம் வென்றுள்ளார். அவருக்கான பி.எச்.டி ஆய்வறிக்கையை அவரே டைப் செய்துள்ளார். விரல்கள் இல்லாவிட்டாலும் கைகளின் நுனியில் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரே ஒரு எலும்புதான் அவருக்கு விரல்கள்.
இரண்டு கைகளிலும் மணிக்கட்டுவரை இழக்க நேரிட்டபோதிலும் 500 மதிப்பெண்களுக்கு 483 மதிப்பெண்கள் பெற்று 10ஆம் வகுப்பில் தேறியவர். இந்த சாதனையை அறிந்த அன்றைய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம், மாளவிகாவை சந்திக்க ஜனாதிபதி மாளிகைக்கு அழைப்பு விடுத்து நேரில் சந்தித்து பாராட்டினார். டெல்லியில் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் ( ஹான்ஸ்) படித்து முடித்த மாளவிகா, டெல்லி ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் மூலம் சமூக சேவையில் மாஸ்டர் பட்டம் பெற்றார். மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்கில் சமூக சேவையில் முதல் வகுப்பில் எம்ஃபில் பட்டம் பெற்றதோடு, "குவாலிடி ஆஃப் லைப்ஆஃப் இன்ட்டியூஜூவல் வித் ஆர்தோ டிஸபிளிடி இன் ரிஹாபிளிடேஷன் சென்டர்ஸ் இன் சென்னை' என்ற தனது ஆய்வு கட்டுரைக்காக 2012-ஆம் ஆண்டுக்கான சுழற்கோப்பையையும் பெற்றார்.
இவருக்கு பல நாடுகளிலிருந்து சொற்பொழிவாற்ற வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் இவர் சர்வதேச மோட்டிவேஷனல் சொற்பொழிவாளர் தொழிலையே தேர்ந்தெடுத்தார். அமெரிக்கா, நார்வே, இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று உரையாற்றினார்.
உடல் ஊனம் என்பது திறமையை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை நம் குழந்தைகளுக்கு உணர்த்துவது நம் கடமை. பள்ளிகளில் ஆசிரியர்களால் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியும். மாற்று திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் கதைகளை சொல்ல வேண்டும். நம் சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வாழ உரிமை உண்டு. அவர்கள் திறமையை வெளிக் கொண்டு வரவேண்டுமே தவிர உடல் ஊனத்தை சுட்டி காட்டக்கூடாது. இந்த கருத்தை அவர் கிட்டத்தட்ட எல்லா சொற்பொழிவுகளிலும் கூறியுள்ளார்.
மக்களின் கவனத்தை என் மீது திருப்ப வேண்டுமென்பது என் நோக்கமல்ல. என் மீது நானே கவனம் செலுத்தியதால்தான் என்னுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு வகையில் இந்த விபத்து ஏற்பட்டது நல்லதென்றே நினைத்ததுண்டு. இந்த விபரீதம் நடக்காமலிருந்தால் நான் ஒரு சாதாரண வாழ்க்கையைதான் தேர்ந்தெடுத்திருப்பேன். சுற்றியுள்ள பல வாய்ப்புகளை அனுபவங்களை அறிந்திருக்க முடியாது. நம் ஒவ்வொருவருக்குமே வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அலட்சியப்படுத்தாதீர்கள். போராடுங்கள், நிச்சயம் உங்களால் வாழமுடியும்'' என்பதுதான் மாளவிகாவின் தாரக மந்திரம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout