ஜிகா, எய்ட்ஸை துரத்தி அடித்த ஒருநாடு, கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கிக் கொண்டது எப்படி??? கள நிலவரம்!!!
- IndiaGlitz, [Monday,May 18 2020]
அரசமைப்பு உருவாகாத காலக்கட்டத்தில் ஒரு பழமொழி சொல்லப்படுவது உண்டு. ”அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்” இந்த பழமொழி தான் தற்போது தென் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான பிரேசிலின் நிலவராமாக இருக்கிறது. கொரோனா அச்சத்தால் உலகமே பயந்து நடுங்கும்போது அந்நாட்டின் அதிபர் பொல்சனாரூ மட்டும் ஒரு பயமும் இல்லாமல் இருக்கிறார். இத்தனைக்கு அந்நாடு கொரோனா பாதிப்பில் உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்திலேயே செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் அதிபர் “எங்கே கொரோனா இருக்கிறது, காட்டுங்கள்? கால்பந்து விளையாட்டு அரங்கத்தைக் காட்டி இங்கே இருக்கிறதா?” என்று கேட்டார். அடுத்து கொரோனா உலகம் முழுவதும் பரவி கோரத் தாண்டவம் ஆடிய நிலையில் கொரோனா வைரஸ்க்கு பயப்படத் தேவையில்லை. இது வெறும் காய்ச்சல் என்று தெரிவித்தார். மேலும் அச்சம் தெரிவித்த அந்நாட்டின் விஞ்ஞானிகளைப் பார்த்து கொரோனா பற்றி தவறான வதந்திப் பரப்பினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு நடுவில் அதிபர் கொரோனாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மேரும் 15 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
அதைவிட அதிர்ச்சி தரும் ஒரு தகவலாக அந்நாட்டில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை பாதிப்புக்கும் காரணமாக அதிபர் சொல்வது என்னவென்றால் “கொரோனா பாதுகாப்புக்காக நாட்டை முடக்கி விட்டால் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். அப்போது நிலைமையைச் சமாளிப்பது கடினமாகிவிடும்” என்பதுதான். சுவீடனில் இதுவரை கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு எதுவும் பிறப்பிக்கப்பட வில்லை. ஆனால் அந்நாட்டில் உயிரிழப்பு வெறுமனே 2 ஆயிரத்தைத் தாண்டித்தான் இருக்கிறது. சுவீடன் போன்ற பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மக்களின் அடர்த்தி மிகவும் குறைவு. மேலும் அந்நாட்டில் குடும்ப அமைப்பு போன்ற நெருக்கடி நிலைமைகள் இல்லாமல் மக்கள் தனித்து வாழும் வழக்கமும் அதிகம். எனவே சமூக விலகலுடன் எளிதாக கொரோனா பரவலைத் தடுக்க முடிகிறது.
இதற்கு மாறாக பிரேசிலும் இதே நடைமுறையை கடைபிடிக்கலாமா? இது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று அந்நாட்டை உலகில் பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதைத்தவிர பிரேசிலின் வரலாற்றுப் பக்கங்களையும் எடுத்துக் காட்டி சில மனம் வருந்தி வருகின்றனர். அதாவது 1990 களில் அதிகமாக பரவி வந்த HIV வைரஸை நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச மருந்து கொடுத்து பரவலை முழுமையாக பிரேசில் கட்டுப்படுத்தியது. அதோடு 2014 மலேரியாவுக்கு எதிராக மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உருவாக்கி அதன் மூலம் மலேரியாவை அந்நாடு முழுமையாகக் கட்டுப்படுத்தியது. அத்தகைய பிரேசில் நாடுதான் இன்றைக்கு கொரோனா பாதிப்பினால் திண்டாடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் இருந்த கொரோனா, பாதுகாப்பு மற்றும் ஊரடங்கு எதுவும் இல்லாமல் தற்போது பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இது வெறும் காய்ச்சல்தான் என்ற மனநிலையில் இருந்த மக்களுக்கு இப்போது தான் நிலைமை தெரிய வந்திருக்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாகப் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பெரிய பெரிய சவக்குழிகள் வெட்டப்பட்டு அடக்கம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லாத நிலையில் நூற்றுக் கணக்கான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இத்தனைக்கும் அந்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் இன்னும் அதிகரிக்கப்பட வில்லை என்பதும் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வில்லை என்றாலும் சில மாகாணங்களின் ஆளுநர்கள் அரசை எதிர்த்து ஊரடங்கை அமல் படுத்தி வந்தன. அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் Luiz Henrique mandetta ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் அதோடு தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறிய வந்த நிலையில் அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அடுத்து புதிய சுகாதாரத் துறை அமைச்சராக Nelson Teich என்பவர் பதவி ஏற்றுக் கொண்டார். உறுதிபடுத்தப்படாத நிலையில் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டாம் எனக் கூறியதால் அவருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. வந்த ஒரே வாரத்தில் புதிய சுகாதாரத் துறைஅமைச்சரும் பதவி விலகினார்.
தற்போது 10 க்கும் மேற்பட்ட மாகாண ஆளுநர்கள் ஊரடங்கை அமல்படுத்துமாறு அரசை வலியுறுத்தி வந்த நிலையில், அவர்கள் மேல் வழக்குத் தொடுக்கப்படும் என அதிபர் எச்சரித்து இருக்கிறார். அந்நாட்டில் பெரும்பாலான மக்களிடம் கொரோனா என்பது வெறுமனே காய்ச்சல்தான் என்ற மனநிலை இருப்பதால் முறையான சமூக விலகலும் கடைபிடிக்கப் படுவது இல்லை. பரிசோதனை செய்யப்படும் அளவும் குறைவாக இருப்பதால் உண்மையான பாதிப்பின் அளவும் முழுமையாகத் தெரியவில்லை. இதே நிலைமை தொடருமானால் என்னவாகும் என்ற கேள்விதான் தற்போது பெரும்பாலானவர்களை தொற்றி இருக்கிறது.