கல்வான் பகுதியில் இந்தியா-சீனா இடையே மோதல் வெடித்தது எப்படி??? செயற்கைக்கோள் புகைப்படம்!!!
- IndiaGlitz, [Thursday,June 18 2020]
இந்தியா தற்போது எல்லைப் பகுதியில் ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் கடந்த திங்கள் கிழமை 20 இந்திய இராணுவ வீரர்கள் சீனாவிற்கு எதிராக கைகலப்பில் உயிரிழந்து உள்ளனர். கார்கில் போருக்கு அடுத்து இத்தனை உயிரிழப்பு ஒரே நேரத்தில் நடந்திருக்கிறது என்ற அதிர்ச்சியையும் சில ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. அதே நேரத்தில் சீனாவின் இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாக வில்லை. இச்சம்பவத்தின் போது என்ன நடந்தது? குறிப்பாக எந்த இடத்தில் நடந்தது என்ற குறிப்புகளை வெளிப்படுத்தும் விதமாக தற்போது ராய்ட்டஸ் செய்தி நிறுவனம் ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில் சீனா தனது எல்லைப் பகுதியில் சாலை கட்டமைப்பு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பகுதியில் இருந்து சீன ராணுவம் இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கிற்கு வந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மோதலில் ஒரு உயரமான பாறையில் இருந்து பனிக்கட்டிகளை தூக்கி எறிந்ததும் செயற்கைக்கோள் புகைப்படத்தில் பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பாகக் கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.